`பெட்டி’ கொடுத்தோமே, திறந்து பார்க்கலையா?'- ரங்கசாமிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்!

”பட்ஜெட்டில் எந்தெந்தத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பதைச் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேட்டார். அவருக்கு, ’பெட்டி’ கொடுத்தோமே, அதைத் திறந்து படித்துப்பார்த்தால் எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது எனத் தெரிந்திருக்கும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.

நாராயணசாமி

முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்தாள் விழா, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை எப்படியான சூழலில் ஆட்சி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பட்ஜெட் போடக்கூட விடாமல் தொல்லைகொடுத்தார்கள். ஒரு மணி நேரத்தில் ஒப்புதல் தரவேண்டிய பட்ஜெட் கோப்புக்கு 45 நாள்கள் டெல்லியில் காத்திருக்க வைத்திருந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாததால், எவ்வளவு சிரமம் என்பதை இப்போதுதான் சிந்தித்துப் பார்க்கிறோம். முடிந்த அளவுக்கு விவசாயிகள், வியாபாரிகளுக்குச் சலுகைகளை அளித்துள்ளோம். எந்தக் காலத்திலும் இலவச அரிசி, சென்டாக் பணம், முதியோர் பென்ஷன் திட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்துவோம். பட்ஜெட்டில் எந்தெந்தத் துறைக்கு நிதி ஒதுக்கீடு என்பதைச் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேட்டார். அவருக்கு, ’பெட்டி’ கொடுத்தோமே, அதைத் திறந்து படித்துப்பார்த்தால் எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது எனத் தெரிந்திருக்கும். பலமுறை நிதி அமைச்சராக இருந்தவர், அதைப் படிக்காமலே கேட்கிறார்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!