'ரஜினியின் பாராட்டுக்கு நன்றி!' - அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையன்

தமிழகக் கல்வித்துறை பற்றியும், தன்னைப் பற்றியும் பாராட்டிப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு நேற்று பத்திரிகையாளர்களைச் சந்திந்த நடிகர் ரஜினிகாந்த், ஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை போலீஸில் ஒப்படைத்த சிறுவன் யாசினைப் பாராட்டி பத்திரிகையாளர்களிடம் பேசினார். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இந்த நேரத்தில், சிறுவன் யாசினைச் சந்தித்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

அப்போது, தமிழகத்தில் கல்வி எப்படியிருக்கிறது என பத்திரிகையாளர்கள் ரஜினிகாந்த்திடம் கேள்வியெழுப்ப, "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் செங்கோட்டையன், அவர் வேலையை நல்லா பண்ணிக்கிட்டு இருக்கார்" என தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைப் பாராட்டிப் பேசினார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணாநகரில் ஒரு தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி திறப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர்,  ``தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. மாணவர்கள் தரமான கல்வி கற்கவும், படித்தவுடன் வேலையைப் பெறுவதற்குமான ஸ்கில் டிரெயினிங் (Skill training) மற்றும் பட்டையக் கணக்காளர் போன்ற பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. நம்முடைய கல்வித்துறையின் சிறப்பைப் பற்றி சொன்னதற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு அரசின் சார்பாக என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!