வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (16/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (16/07/2018)

`தியாகிகளை அரசு அலட்சியப்படுத்துகிறது'  - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்!

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது மட்டுமே தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுக்குவருகிறார்கள். நாட்டின் விடுதலைக்காகத் தங்களது வாழ்க்கையையே தியாகம்செய்த தியாகிகளின் குறைகேட்புக் கூட்டம், பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என ஆதங்கப்படுகிறார், தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தின் தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

தியாகிகள்

இதுகுறித்து தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ள விமலநாதன், ‘’சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும்  அவர்களது வாரிசுகளின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்ற, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாதந்தோறும் குறை கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என 2001-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமாக இருந்த இந்தத் தியாகிகள் மற்றும்  அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவும் மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியம், அரசு சலுகைகள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அக்கறையின்மையாலும், பல தியாகிகள் மற்றும்  அவர்களது வாரிசுகளுக்கு இவைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. 

இதைப் போக்கும் விதமாகத்தான் குறைகேட்புக் கூட்டம் நடத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த பல ஆண்டுகளாகவே இக்கூட்டம் நடத்தப்படவே இல்லை. இது, மிகவும் வேதனையானது. தஞ்சாவூரில் கடைசியாக 2012-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு,  ஆறு ஆண்டுகளாக இக்கூட்டம் நடத்தப்படவே இல்லை. தமிழக அரசு இதை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகி பெரியய்யா தனக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘’நமது சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளை, அரசிடம் உதவிகோரி அலையவிடக் கூடாது. நாம், அவர்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று, அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும்” என அத்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதையும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். இனியாவது மாதந்தோறும் இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.