`ரஜினி ஆதரித்ததால் 8 வழிச்சாலை சூப்பர் சாலையாக மாறும்'- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

`சேலம் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளதால், இனி இது சூப்பர் சாலையாகும்' என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

விருதுநகரில் நேற்று நடந்த காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர், மாலை மதுரை பாண்டி கோயில் திடலில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் போட்டி வந்துவிடக்கூடாது என்று முதல்வர், இரு அமைச்சர்களும் ஏற்பாடு செய்த வெவ்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். பின்னர் மாலை சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்துவிட்டு விமானம் மூலம் சென்னை கிளம்பினார். இந்நிலையில், இரண்டாவது நாள் சைக்கள் பேரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், ``8 வழி சாலைக்கு ரஜினி அதரவு தெரிவித்ததால், இனி இது `சூப்பர் வழி'  சாலையாகும் . அமித் ஷா தமிழ்நாடு ஊழல் மிகுந்த ஆட்சி எனக் கூறியது அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்தத்தான். தூற்றும் நபர்கள் தூற்றட்டும், போற்றும் நபர்கள் போற்றட்டும். தற்போது நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெறும்" என்றார். 

அப்போது, டி.டி.வி தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் முட்டை ஊழல் மூலம் ஆட்சி கவிழும் என்று கூறி வருகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த உதயகுமார், ``கவிழும் என்று கூறியவர்கள் தான் கவிழ்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார். இதற்கிடையே,  இந்தச் சைக்கிள் பேரணி இன்று ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, மேலூர் வழியாக அழகர்கோயிலில் நிறைவடைகிறது. வரும் புதன்கிழமை வரை இந்த சைக்கிள் பேரணி தொடரும் என அ.தி.மு.க தொண்டர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!