`கார்தான் எனக்கு ஆபீஸ்!’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ  | I dont have office premises till now, says Villivakkam MLA

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (16/07/2018)

கடைசி தொடர்பு:16:43 (16/07/2018)

`கார்தான் எனக்கு ஆபீஸ்!’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ 

ரங்கநாதன் எம்எல்ஏ

வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தி.மு.க-வைச் சேர்ந்த ரங்கநாதனுக்கு அலுவலகம் இல்லை. இதனால் தன்னுடைய காரைத்தான் எம்.எல்.ஏ அலுவலகமாக அவர் பயன்படுத்திவருகிறார். 

வில்லிவாக்கம் தொகுதியில் அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல் பாடி மேம்பாலம், திருமங்கலம் வரை உள்ளிட்ட இடங்கள் வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது வில்லிவாக்கம் தொகுதியிலிருந்த அம்பத்தூர், தனி தொகுதியாக உதயமானது. வில்லிவாக்கம் தொகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் தெலுங்கு மொழி பேசும் மக்களும் பரவலாக இருக்கின்றனர். மேலும், இந்தத் தொகுதியில் உள்ள சிட்கோ நகரில் தனியார் தொழிற்சாலைகளும் கம்பெனிகளும் அதிகம் உள்ளன. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த ரங்கநாதன், எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவருக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லை. இவருக்கு முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்த ஜே.சி.டி.பிரபாகரும் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லாமல்தான் பணியாற்றினார். இந்தச் சூழ்நிலையில் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் கேட்டு ரங்கநாதன் எம்.எல்.ஏ பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தன்னுடைய காரையே எம்.எல்.ஏ அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் ரங்கநாதன் எம்.எல்.ஏ. நடுரோட்டில் காரை நிறுத்தி மக்களிடமிருந்து மனுக்களை பெறுவதாக அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ``வில்லிவாக்கம் தொகுதிக்கு அம்பத்தூரில் எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தது. தொகுதி சீரமைப்புக்குப் பிறகு அம்பத்தூர் தனி தொகுதியானது. இதனால், அந்த அலுவலகத்தை வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வால் பயன்படுத்த முடியவில்லை. எம்.எல்.ஏ அலுவலகம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான் கொடுத்த மனுவுக்கு சமீபத்தில் வந்த பதிலில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்டுவதற்கான வாய்ப்புகள், வசதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால், தொகுதி முழுவதும் நான் வலம் வந்து மக்களின் குறைகளைக் கேட்டுவருகிறேன். பெரும்பாலும் காரில்தான் மனுக்களை வாங்கிக் கொண்டு வருகிறேன். வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஓர் இடத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்தேன். ஆனால் அந்த இடம், நீதிமன்ற வழக்கில் உள்ளது. மேலும், இன்னும் சில இடங்களைத் தேர்வு செய்தோம். ஆனால், அந்த இடங்களிலும் வழக்கு உள்ளது. இதனால் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லாமல் மக்கள் பணியாற்றிவருகிறேன்" என்றார்.