சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்! | Sexual harassment for 7th std student - 3 neighbours arrested

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (16/07/2018)

கடைசி தொடர்பு:17:10 (16/07/2018)

சென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்!

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை (மாதிரி படம்)

சென்னையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பல மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவியின் தாய் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், ``என்னுடைய மகளுக்கு 11 வயதாகிறது. அவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஜனவரியிலிருந்து என்னுடைய மகளுக்கு நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட்டில் உள்ள சிலரால் பாலியல் தொந்தரவு இருந்து வருகிறது. இதனால், என்னுடைய மகள் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவியிடம், பெண் போலீஸார் தனியாக விசாரித்தனர். அப்போது அவர், நடந்த சம்பவத்தை முழுமையாக விவரித்தார். அடுத்து மாணவி கூறிய 15 பேரை விசாரணைக்காகப் போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவியின் தாய் கொடுத்த புகாரில் அப்பார்ட்மென்ட்டில் பணியாற்றும் காவலாளிகள், துப்புரவுப் பணியாளர்கள், ஊழியர்கள், அங்கு குடியிருப்பவர்கள் என 15 பேர் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். அவர் குறிப்பிட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் மூன்று பேர் மட்டுமே மாணவிக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும், மாணவியின் எதிர்காலம் கருதி அவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை. மாணவிக்குத் தொல்லை கொடுத்த மூன்று பேர்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``மாணவியின் தாய் 15 பேர் மீது புகார் கொடுத்ததும் தீவிரமாக விசாரித்தோம். மாணவியிடமும் விசாரணை நடத்தினோம். அவரிடம் தவறாக நடந்தவர்கள் குறித்த விவரத்தை எங்களிடம் முழுமையாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் மூன்று பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம். மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்" என்றார்.