`90 அடியை எட்டியது' - 2 ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது

பாசனத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேட்டூர் அணை

நீண்ட, நெடிய சட்டப்போராட்டங்களுக்கு மத்தியில் காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் நான்கு மாநிலங்கள் சார்பிலும் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடத்தப்பட்டது. முன்னதாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 4 டி.எம்.சி நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்தது. ஆணையம் அமைக்கப்பட்ட பின்பும், காவிரியில் இருந்து நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்துவந்தது. இதனால் போதிய தண்ணீர் இல்லாத காரணத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு திறந்துவிடப்படும் மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகினர்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட நான்கு கர்நாடக அணைகள் தனது முழுக்கொள்ளளவை எட்டிவருகின்றன. இதனால் 1 லட்சம் கனஅடி வீதம் இந்த அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதையடுத்து, மேட்டூர் அணை வேகமாக நிரம்பிவருவதுடன் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. 

இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து வரும் 19-ம் தேதி நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் திறப்பால் காவிரிப் படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்படும் என்றும் இதனால் விவசாயிகள் தேவை பூர்த்தி அடைவதுடன் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மேட்டூர் அணையைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் காவிரி டெல்டா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!