இன்னும் 4 நாள்களில் மேட்டூர் அணை நிரம்பும் - பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

மேட்டூர் அணை

``கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு 1,00,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தால் நான்கு நாள்களில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பிலிகுண்டு பகுதியில் தமிழகத்துக்கு 1,10,000  கன அடிக்கு மேல் நீர்வந்துகொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 8-ம் தேதி அணையின் நீரின் அளவும் 63,680 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீரின் அளவு 90 அடியாக இருக்கிறது. கடந்த பத்து நாள்களில் 26 அடி உயர்ந்துள்ளது. 2013-க்குப் பிறகு தற்போது மேட்டூர் அணைக்கு தற்போது 1,00,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதேபோல தொடர்ந்து 4 நாள்கள்  நீர் வந்தால் மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும். தற்போது இருக்கும் நீர் கடல் போல காட்சியளிப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மேட்டூர் அணையைப் பார்வையிட்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதுபற்றி பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தற்போது கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு 1,00,000 கன அடி வீதம் நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதேபோல நீர்வந்துகொண்டிருந்தால் 4 நாள்களில் அணையின் முழுக் கொள்ளளவை எட்டும். அப்போது முதற்கட்டமாக பவர் ஹவுஸ் வழியாக 25,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 25,000 கன அடி நீரையும் வெளியேற்றுவோம். அதற்காக அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். தற்போது அணையிலிருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!