ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சித்தா மருத்துவப் படிப்புக்குக் கலந்தாய்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில், இந்திய மருத்துவமுறை கல்விகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கேட்டநிலையிலும், விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. இதையடுத்து, இந்திய மருத்துவமுறை படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தமிழகத்தை வலியுறுத்திவந்தது.

இந்தநிலையில், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு பன்னிரண்டாம் மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக நீட் தேர்வை இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!