டெண்டர் எடுத்தவர்களின் விவரத்தை மறைப்பது ஏன்? முதல்வர் பழனிசாமிக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேள்வி

அரசு டெண்டர்கள் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை மூடி மறைப்பது ஏன் என தமிழக அரசுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.  

கிறிஸ்டி நிறுவனம்

அடுத்தடுத்து நடந்து வரும் ரெய்டுகளால் தமிழக அரசியல் அடுத்தகட்ட பரபரப்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கான முட்டைகளை சப்ளை செய்யும் பணியைக் கடந்த சில ஆண்டுகளாகவே நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தில் ஊழல் புகார் எழவே, கடந்த 5-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாள்கள் வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்தியது. 

கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம் என அவர்களுக்குத் தொடர்புடைய இடங்கள் அனைத்தும் ரெய்டில் இருந்து தப்பவில்லை. இதில், ரூ.1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் கிறிஸ்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தமிழக நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்ட் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான `எஸ்பிகே' நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், இந்த ரெய்டுகள் குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பியுள்ளது. அதில், ``ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் டெண்டர்கள் கொடுக்கப்படும் மாநிலத்தின், டெண்டர் இணையதளத்தில் (www.tenders.tn.gov.in) யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது என்ற விவரம் காலியாக இருப்பது ஏன். டெண்டர் முறைகேடுகளை மூடி மறைக்கவா. யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது என்பது பொதுவெளியில் விவாதத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவா. மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஒவ்வொரு டெண்டரிலும் எத்தனை பேர் பங்கேற்றார்கள், யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது, என்ன விலைக்குக் கொடுக்கப்பட்டது,  எந்த ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டார்கள் போன்ற விவரங்களை எளிமையாகப் பார்க்கும் விதத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 

எஸ்பிகே நிறுவனம்

அதையும் செய்யவில்லை. `தேடுதல்' (Search) பகுதியில் குறிப்பிட்ட டெண்டரின் ஐடியைக் கொடுத்துத் தேடினாலும் விவரங்கள் வருவதில்லை. சமீபத்தில் நடந்த முட்டை டெண்டர் என எந்த டெண்டரைத் தேடினாலும் வருவதில்லை. கிறிஸ்டி நிறுவனம், எஸ்.பி.கே போன்ற அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமானவரிச் சோதனை நடைபெற்றுவரும் இச்சூழலில், மேற்குறிப்பிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுவதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. வெளிப்படையான அரசு நிர்வாகத்தை நடத்துகிறோம் என்று மார்தட்டும் தமிழக அரசு ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!