``சென்னை நிகழ்வுக்கு சாட்சிகளை வரவிடாமல் தடுத்துள்ளனர்”- தூத்துக்குடி போலீஸ் மீது குற்றச்சாட்டு! | Police stopped victims from participating in Chennai press meet, says human rights activist Henry Dibane

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (16/07/2018)

கடைசி தொடர்பு:20:06 (16/07/2018)

``சென்னை நிகழ்வுக்கு சாட்சிகளை வரவிடாமல் தடுத்துள்ளனர்”- தூத்துக்குடி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

மொத்த நிர்வாகமும் சம்பவ இடத்தில் இல்லாதவாறு தாங்களாகவே செய்துகொண்டது, எல்லா அதிகாரங்களையும் போலீஸே கையில் எடுத்துக்கொண்டதற்கு வழிவகுத்துவிட்டது. ஊர்வலத்தின்போது கல்லெறிந்தவர்கள் போலீஸ் தரப்புக்குள்ளேயே இருந்திருக்க முடியும் என்பதற்கான போதுமான சான்றுகள் உள்ளன.

``சென்னை நிகழ்வுக்கு சாட்சிகளை வரவிடாமல் தடுத்துள்ளனர்”- தூத்துக்குடி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

``சட்டம் ஒழுங்குப் பிரச்னை இல்லாதநிலையில் தூத்துக்குடியில் போலீஸ்படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டிருப்பதற்கான தேவை எதுவும் இல்லை" என்று உண்மையறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி படுகொலைகள் தொடர்பாக, ’மக்கள் கண்காணிப்பகம்’ எனும் அரசுசாரா அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிபேனின் ஒருங்கிணைப்பில், முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாணவர்கள், மீனவர் அமைப்பினர், மனிதஉரிமை நிறுவனப் பணியாளர்களைக் கொண்ட உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் விசாரணையின் ஆங்கில அறிக்கை, சென்னையில் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டது. 

நுங்கம்பாக்கம் லயோலா பொறியியல் கல்லூரியில் முற்பகல் 11 மணியளவில் நிகழ்வு தொடங்கியது. தேசிய சட்ட ஆணையத்தின் தலைவரும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான ஏ.பி.ஷா, விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு சனிக்கிழமை மதியம் முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வர இயலாதநிலை ஏற்பட்டது என்று ஹென்றி டிபேன் தெரிவித்தார். 

தூத்துக்குடி

ஏ.பி.ஷா வராதநிலையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் வெளியிட, தமிழ்நாட்டு அரசின் ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச்செயலாளர் கிறித்துதாஸ் காந்தி, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

தூத்துக்குடியில் போலீஸின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இந்தக் குழுவின் சார்பில் மொத்தம் 69 பேர் கடந்த மே 28 முதல் ஜூன் 1-ம் தேதிவரை நேரில் சந்தித்தனர். அவர்களிடமிருந்து போலீஸ் துப்பாக்கிச் சூடு, போலீஸின் சித்ரவதை ஆகியவற்றால் நிகழ்ந்த மரணங்கள், சட்டவிரோதக் கைதுகள், பிடித்துவைப்புகள், நள்ளிரவில் தேடுதல் எனும் பெயரிலான நடவடிக்கைகள், மருத்துவமனையில் பிடித்துவைப்பு, சடலக்கூறாய்வில் மாறுபாடு ஆகியவை தொடர்பாக, 217 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

விசாரணைக் குழுவின் அறிக்கையில் இறுதியாக, முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அதில், “மே 22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணி பற்றியும் அதற்காக நடந்துகொண்டிருந்த தயாரிப்பு குறித்தும் அரசு நிர்வாகத்துக்கு நன்றாகவே தெரியும். அதாவது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பது தெரிந்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அந்த நாளன்று மொத்த நிர்வாகமும் சம்பவ இடத்தில் இல்லாதவாறு தாங்களாகவே செய்துகொண்டது, எல்லா அதிகாரங்களையும் போலீஸே கையில் எடுத்துக்கொண்டதற்கு வழிவகுத்துவிட்டது. ஊர்வலத்தின்போது கல்லெறிந்தவர்கள் போலீஸ் தரப்புக்குள்ளேயே இருந்திருக்க முடியும் என்பதற்கான போதுமான சான்றுகள் உள்ளன. சம்பவத்தில் மேலதிகாரிகளின் ஆணையின்றி போலீஸ் செயல்படவில்லை. எனவே, 14 பேரின் மரணம் குறித்தும் மேலதிகாரிகளின் பங்கு குறித்து நிர்வாக விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சம்பவம் பற்றியோ வேறு நிகழ்வுகள் குறித்தோ போலீஸுக்கு எதிராக, சாட்சிகளோ பாதிக்கப்பட்டவர்களோ முறையிடுவதைத் தடுக்கும்வகையில், பெயர்களைக் குறிப்பிடாத முதல் தகவல் அறிக்கைகள் பயன்படுகின்றன. தூத்துக்குடியில் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்னையும் இல்லாதபோது, அங்கு தொடர்ச்சியாக போலீஸின் இருப்பு தேவையில்லாதது ஆகும். இது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கவே செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மக்கள் கண்காணிப்பகம் 2

முதலில் பேசிய தூத்துக்குடி மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் திலக், ``நீதிமன்றத்தை நாடுவோம் என்று வேதாந்தா சொல்கிறது. அந்த நீதிமன்றத்தின் மூலமாகவே மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை விரட்டியடிப்போம்” என்றார். 

மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் பேசுகையில், ``சென்னையில் நடத்தப்படும் இந்த நிகழ்வுக்காக தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய பேருந்துகளை, வாகனங்களை வரவிடாமல் அதிகாரிகள் மிரட்டி தடுத்துள்ளனர். போலீஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டவர்கள் என நேரடி சாட்சியங்களாக உள்ள பலரையும் இப்படி வரவிடாமல், அவரவர் வீட்டில் போய் மிரட்டியிருக்கிறார்கள். 90 வழக்குகள் வரை போட்டு சிறையிலடைக்கப் போவதாக மிரட்டுவது எவ்வளவு பெரும் அத்துமீறல்? இதனால் ஏராளமானவர்கள் இங்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இங்கு வந்திருக்கும் வழக்குரைஞர் அதிசயகுமாருக்கு, திடீரென விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பியிருக்கிறார்கள். இத்தனை நாள் அவர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாதா? அப்போதெல்லாம் அழைப்பாணை அனுப்பியிருக்கமுடியாதா?” எனக் கேள்விகளை அடுக்கியும் பல சம்பவங்களைக் குறிப்பிட்டும், போலீஸ் துறையின் பல நடவடிக்கைகள் சட்டத்துக்கு மாறாக உள்ளன என விவரித்தார். 

இந்தக் குழுவின் அறிக்கையானது, ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


டிரெண்டிங் @ விகடன்