`அரசு நிர்ணயித்த முழு அளவு மண்ணெண்ணெய் வழங்கிட வேண்டும்' - நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை!

மீன் வளத்துறையின் சார்பில் நாட்டுப்படகு மீனவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெயின் அளவை ஊரில் உள்ள சில மீனவர்கள் குறைத்து வழங்குவதாகவும் நிர்ணயிக்கப்பட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கிட வேண்டும் எனவும் அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

மீனவர்கள்

தமிழக மீன்வளத்துறையின் சார்பில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள், அரசால் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெயின் அளவை ஊரில் உள்ள சில மீனவர்கள் ஏமாற்றி குறைத்து வழங்கப்பட்டு வருகிறது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசால் வழங்கப்படும் 300 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறி, அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய அமலிநகரைச் சேர்ந்த மீனவர் ஜெரால்டு, ``எங்களது அமலிநகர் கிராமத்தில் 160 நாட்டுப்படகுகள் உள்ளன. மீன்பிடித் தொழிலில் 1,000 மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய கமிட்டி உறுப்பினர்கள் மண்ணெண்ணெய் சொசைட்டிக்கான பணத்தைக் கையாடல் செய்துவிட்டாரகள் என எழுந்த புகாரால் மீனவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனால், தமிழக அரசின் மீன்வளத்துறையால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுவரும் 300 லிட்டர் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக, 200 லிட்டர், 250 லிட்டர் என அளவு குறைவாக வழங்கப்படுகிறது. இதனால், 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மண்ணெண்ணெய் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். சில குறிப்பிட்ட மீனவர்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டுதான் இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

அரசின் மானிய விலையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.25-க்கு கிடைக்கிறது. தற்போது இதன் பற்றாக்குறையால் வெளியில் ஒரு லிட்டர் ரூ.60 முதல் 70  வரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில், மண்ணெண்ணெய்க்கு என அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!