வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (16/07/2018)

கடைசி தொடர்பு:22:40 (16/07/2018)

தமிழகத்தில் பெண்களுக்கான முதல் சிறப்பு மையம் - நெல்லையில் தொடக்கம்!

தமிழக காவல்துறை சார்பாக பெண்கள், குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு மையம் நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது. 

சிறப்பு மையம் தொடக்கம்

நாடுமுழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தேசிய மகளிர் ஆணையம், தமிழக காவல்துறை ஆகியவை சார்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல்துறையின் மகளிர் காவல்நிலையத்தில் இதற்கான சிறப்பு பிரிவு இன்று தொடங்கப்பட்டது. 

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உளவியல், சமூக, சட்டம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக இந்தச் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பாக இந்த மையத்தில் பாதிகப்பட்டவர்களுக்கு உளவியல் சார்பான உதவிகளும், சட்ட உதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பாதிப்புக்கு உள்ளானால், இந்த மையத்தில் சட்ட ரீதியாகவும் உளவியல் தொடர்பாகவும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக சட்ட வல்லுநர்களும் உளவியல் வல்லுநர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். தற்போது இந்த மையம் நெல்லையில் தொடங்கப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து சேலம், மதுரை, சென்னை என நான்கு நகரங்களில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.