பார்வையற்ற மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கக்கோரி மனு!

கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

லேப்டாப் வழங்க கோரிக்கை

நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாணவ, மாணவிகள் சார்பாக நெல்லை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அதில், ``நாங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறோம். பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கால், கைகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளான எங்களின் படிப்புக்கு அரசு சார்பாக வழங்கப்படும் இலவச மடிக்கணினி உதவிகரமாக அமையும். 

ஆனால், எங்களுக்கு இலவச லேப்டாப் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் எங்களுக்கு கல்விக்கான தேவைகள் மறுக்கப்படுவதாகவே நாங்கள் நினைக்கிறோம். அத்துடன், எங்களின் கல்விக்குப் பயன்படக்கூடிய உபகரணங்களும் வழங்கப்படவில்லை. அதனால், எங்களின் கல்வித் தேவையை நிறைவேற்றும் வகையில் எங்களுக்கு இலவச லேப்டாப், கல்வி உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரியுள்ளனர். இந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இது குறித்துப் பேசிய மாற்றுத்திறனாளி மாணவர்கள், ``பார்வையற்றவர்களுக்கு பிரெய்ல் எழுத்துகள் கொண்ட பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வி வரையிலுமே அதிகமாக இருக்கின்றன. உயர்கல்விக்கு அந்தவகையான புத்தகங்கள் இல்லாததால் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் அவசியப்படுகிறது. அதனால் மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!