Published:Updated:

`தாய்க்குப் பெருமைசேர்த்த மகமு சுந்தரபாண்டியன்!' -131 ஆண்டு பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு

131 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு
131 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு

சிவகங்கை நகர் 1733-ல் அமையப்பெற்றாலும் 13-ம் நூற்றாண்டிலேயே பெருமாள்கோயில் இருந்ததை அறிய முடிகிறது. இக்கோயில் மகமு சுந்தர பாண்டியன் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-15ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. வைகை நதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி, உலகத் தமிழர்களின் கொண்டாட்டமாய் மாறியது.

கீழடி
கீழடி

தினம், தினம் ஒரு ஆச்சர்யம் என ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவுபெற்று, அவற்றில் கிடைத்த சான்றுகள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கனிமொழி மதி, சு.வெங்கடேசன் உட்பட பலரின் முயற்சியால் கீழடி நாகரிகம் வெளியுலகின் பார்வைக்கு வந்தது.

தற்போது 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், மார்ச் மாதம் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி நடைபெற உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டிராஜன் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 131 ஆண்டுகள் பழைமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை கண்டறிந்துள்ளார்தொல்லியல் ஆர்வலர் கா.காளிராசா.

காளிராசா
காளிராசா

காளிராசாவிடம் பேசினோம். `` சிவகங்கை முத்துப்பட்டி கிராமத்தை அடுத்த பாண்டியாபுரம் முனிக்கோயிலில் கிடந்த கல்வெட்டு ஒன்றை ஆய்வு செய்தோம். அக்கல்வெட்டு 131 ஆண்டுகள் பழைமையான ஜமீன்தார் கால கல்வெட்டு எனத் தெரியவந்தது.

மகமு சுந்தர பாண்டியனால் இக்கல்வெட்டு வெட்டி வைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக அனைவரும் தந்தையின் பெயரை முன்சூட்டிக் கொள்வர். ஆனால், இவரோ தன்னை மகமு சுந்தரபாண்டியன் எனக் கூறிக்கொள்வதின் மூலம் தாயின் பெயரை முன்சூட்டி தாய்க்குப் பெருமை சேர்க்கிறார்.

உறைகிணறு, சூதுபவளம், நீர் மேலாண்மை... தமிழர் தொன்மை சொல்லும் கீழடி பொக்கிஷங்கள்! (படங்கள்)

பெருமாள்கோயிலில் 13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்தியத் தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இக்கோயிலில் கடந்த குடமுழுக்கின்போது கேட்பாரற்றுக்கிடந்த 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

காளிராசாவுடன் தொல்லியல் ஆர்வலர்கள்
காளிராசாவுடன் தொல்லியல் ஆர்வலர்கள்

சிவகங்கை நகர் 1733-ல் அமையப்பெற்றாலும் 13-ம் நூற்றாண்டிலேயே பெருமாள்கோயில் இருந்ததை அறிய முடிகிறது. இது மகமு சுந்தர பாண்டியன் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம்" என்றார்.

இதுபோன்ற கல்வெட்டுகள் கீழடிக்குப் பலநூறு ஆண்டுகள் பிந்தைய சான்றுகளாக இருந்தாலும் இதற்கு முந்திய வரலாறுகளைக் கண்டறியும் சான்றாகவும் அமையலாம்.

``சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மட்டுமல்லாது, இலந்தக்கரை, வேளாங்குளம், வெள்ளக்கல், முடிக்கரை, நல்லேந்தல் கண்டனிக்கரை என்று பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இவற்றை அகழாய்வுக்கு உட்படுத்தும்போது கீழடிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு தெரியவரலாம்" என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு