வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (16/07/2018)

கடைசி தொடர்பு:12:03 (17/07/2018)

அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு

``அ.தி.மு.க-வின் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள், எவ்வித ஆதாரமும் நிரூபணமும் இல்லாமல் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் அப்படிப் பேசிவருகிறார்கள்.” எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

'அ.தி.மு.க-வின் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள், எவ்வித ஆதாரமும் நிரூபணமும் இல்லாமல் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் அப்படிப் பேசிவருகிறார்கள்' என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

துாத்துக்குடி காமராஜர் கல்லுாரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடி, தமிழத்தின் தலைசிறந்த முதல்வராக விளங்கியவர் பெருந்தலைவர் காமராஜர். அ.தி.மு.க ஆட்சியில்தான் மதுரை பல்கலைக்கழகத்துக்கு காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில்தான், சென்னையில் காமராஜர் வாழ்ந்த வீடு, அரசின் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு ஆகும். மக்களின் உணர்வை மதித்துதான் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு, ஆலையும் சீல் வைக்கப்பட்டது. கடந்த மே 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டத்தில், வன்முறைச் சம்பவம் நடந்தாலும் அதுவரை கிராமங்களில் நடைபெற்றுவந்த மக்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை.

கிராமங்களில் நடந்த போராட்டங்களில், மக்களுக்கு அரசு பாதுகாப்பு அளித்தது. அத்துடன், முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற கடந்த மே 22-ம் தேதிக்கு முன், 23 நாள்களுக்கு முன்பாக, கடந்த ஏப்ரல் 9-ம் தேதியே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குதலுக்கான அனுமதி  ரத்துசெய்யப்பட்டது. தொடர்ந்து, ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. தற்போது, ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான்.

மடத்தூர் கிராம மக்களும், திரேஸ்புரம் பகுதி மீனவக் கிராம மக்களும் நாங்களாக போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சிலரின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டத்தில் கலந்துகொண்டோம் என அவர்களே கூறியுள்ளார்கள்.   

தற்போதைய அ.தி.மு.க அரசில் ஊழல் நடைபெற்றுள்ளது எனச் சொல்பவர்கள், அரசியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாகப் பேசுகிறார்கள். மாங்காய் புளித்ததா... வாய்புளித்ததா... எனப் பேசுபவர்கள், வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். இதுவரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை. சட்டமன்றத்தில் பலமான எதிர்க்கட்சியான தி.மு.க.கூட அ.தி.மு.க அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை' என்றார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில்,போலீஸாரின் தடியடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த மரிய சிலுவை என்பவருக்கு, அவரின் வாழ்வாதாரத்துகாக, தனியார் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக ஆட்டோ வழங்கப்பட்டது. கடந்த, 2017-ல், ஒகி புயலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில், மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கான  பணி ஆணையும்  வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க