6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..! அதிர்ந்த திருவாரூர் மக்கள் | Cylinder that erupted in 6 houses at Thiruthuraipoondi

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:11:07 (17/07/2018)

6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..! அதிர்ந்த திருவாரூர் மக்கள்

சிலிண்டர் வெடித்ததில், திருத்துறைப்பூண்டியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

சிலிண்டர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பெரியநாயகிபுரத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில், பெரும்பாலும் கூரைவீடுகளே உள்ளன. இன்று மதியம், ஒரு வீட்டில் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவியது. அந்தப் பகுதியில் உள்ள           20-க்கும் மேற்பட்ட வீடுகளில் காற்றின் வேகத்தால் தீ பரவியது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்க முற்பட்டனர். பெருமளவில் பரவிய தீயால், அருகில் இருந்த வீடுகளிலிருந்த 6-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வரிசையாக வெடிக்க ஆரம்பித்தன. சிலிண்டர்கள் வெடித்து தீ பரவியதில், அருகில் இருந்த வ.உ.சி.நகர், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.

திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. வீடுகளில் பரவும் தீயை அணைத்துக்கொண்டிருந்தபோது, நெடும்பலத்தைச் சேர்ந்த ராஜன் என்ற வாலிபரின் தலையில் சிலிண்டரின் மேல்பகுதி வேகமாக அடித்ததில் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.