நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டிக்கிடக்கும் பாசனக் கால்வாய்கள்... தவிக்கும் விவசாயிகள்!

மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதி திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாகத் தூர் வாரும் பணிகள் மேற்கொண்டு, இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

விவசாயிகள்

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அபரிமிதமாகக் கன மழை பொழிந்துவருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி, முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அங்கு வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்க, அங்குள்ள அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஓரிரு நாள்களில் 90 அடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்கு, ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அடுத்த ஒரு வாரத்தில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தண்ணீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் என அடுத்தடுத்து பாய்ந்து விவசாயிகளின் வயல்களுக்கு வந்தடைய வேண்டும். ஆனால், தூர் வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றால்தான் இந்த ஆண்டு நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என கவலையோடு தெரிவிக்கிறார்கள். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!