பெண்ணைத் தாக்கிய காட்டு யானை - 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் விரட்டியடிப்பு!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள  ஒரு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை, பெண் ஒருவரைத் தாக்கிவிட்டு, அதேபகுதியில் 5 மணிநேரத்துக்கு மேலாக சுற்றிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   

காட்டு யானை

ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனத்தை ஒட்டியுள்ள தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் குருநாதி (60). இவர்,  நேற்று (ஜூலை 16) காலை 5.45 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பி, வெளியூர் செல்வதற்காகப் பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்திருந்தார். அந்த நேரம் பார்த்து, பேருந்து நிலையம் அருகே வியாபாரத்திற்காகக் குவிக்கப்பட்டிருந்த பலாப்பழ வாசனையை பிடித்துக்கொண்டு, காட்டுக்குள் இருந்து இறங்கியிருந்த 3 வயது பெண் யானை ஒன்று, பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உலாவிக்கொண்டிருந்தது. இதையறியாமல் அந்தப் பகுதி வழியாக வந்த குருநாதியை, அந்த யானை கடுமையாகத் தாக்கியது. யானையின் பிடியில் சிக்கி குருநாதி கதறியதைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி கூச்சலிட்டு யானை விரட்டினர். படுகாயமடைந்த அந்தப் பெண்மணியை சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

யானை

பொதுமக்கள் விரட்டிய யானை காட்டுக்குள் செல்லாமல், மறுபடியும் ஊருக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தியுள்ளது.  எப்படியாவது யானையை காட்டுக்குள் விரட்டிவிட வேண்டுமென பொதுமக்கள் துரத்தியிருக்கின்றனர். இதனால் பதற்றமடைந்து ஓட்டம் பிடித்த யானை, நிலைதடுமாறிக் கீழே விழுந்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், நகர முடியாமல் ஒரே இடத்தில் படுத்திருந்த யானையை, ஜேசிபி மூலம் காட்டுக்குள் விரட்டியிருக்கின்றனர்.

யானை

கொஞ்சதூரம் சென்றதும் மறுபடியும் புதர் மறைவில் நின்று பொதுமக்களுக்கு போக்குக்காட்ட, ஆம்புலன்ஸ் சைரன்  ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அப்பகுதி மக்கள் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளனர். இதற்கிடையே மறுபடியும் ஊருக்குள் ஒரு ரவுண்டு வந்து, கரும்புக்காட்டுக்குள் புகுந்து, கடைசியாக காட்டிற்குள் சென்றது. கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு யானை காட்டுக்குள் சென்ற பிறகுதான் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

யானை

 காட்டு யானை, தனக்கென ஒரு வழித்தடத்தை உருவாக்கி, அந்த வழியில்தான் சென்றுவரும். அப்படி, ஊருக்குள் புகுந்த இந்தக் காட்டு யானை, மறுபடியும் காட்டுக்குள் நுழைய முயற்சித்தபோது, அது திரும்பிச்செல்லும் வழியில் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு யானையை வேறு திசையை நோக்கி விரட்டியிருக்கின்றனர். அதனால்தான் தன்னுடைய பாதையைத் தேடி அந்த யானை 5 மணி நேரத்துக்குமேல் போராடியதாகக் கூறப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!