வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (17/07/2018)

கடைசி தொடர்பு:08:48 (17/07/2018)

விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட கிராமம் விவசாயம் பொய்த்து அழிந்த கதை!

மதுரை சிட்டம்பட்டி பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது கொட்டகுளம் கிராமம். ஆனால் அந்த கிராமத்தின் பெயர் அவ்வழியாக சென்றுவரும் சிலருக்கு மட்டுமே தெரிந்தது

விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட கிராமம் விவசாயம் பொய்த்து அழிந்த கதை!

 

”கொட்டகுளமா…..? அந்த ஊரா… பக்கத்தில தான் இருக்கும!” என்று பக்கத்து கிராமத்தினரே யோசித்து சொல்லவைக்கும் அளவுக்கு ஒரு கிராமத்தின் பெயர் மறந்து போயிருக்கிறது. விவசாயத்தில் கொடிகட்டி பறந்து , பேரும் புகழும் எடுத்துத் தந்த கிராமம் விவசாயம் அழிந்ததால் அழிந்துகொண்டே வருகிறது. விவசாயத்திற்காக கொட்டகை அமைக்கப்பட்டு விவசாயம் செய்து கொட்டகுளம் என்ற செழிப்பான கிராமமாக உருவெடுத்தது . இன்று விவசாயம் பொய்த்த நிலையில் ஆளில்லா கிராமமாக மாறிவருகிறது .

மதுரை சிட்டம்பட்டி பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது கொட்டகுளம் கிராமம். ஆனால் அந்தக் கிராமத்தின் பெயர் அவ்வழியாகச் சென்றுவரும் சிலருக்கு மட்டுமே தெரிந்தது. ஒரு வழியாக கொட்டகுளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே கேட்டு, கேட்டு ஊரின் முகவரியைக் கண்டறிந்தோம். மழைப் பொழிவில் கொளுஞ்சியின் வாசனை அழகாய் மணத்தது. ஊருக்குள் நுழையும் போது ”அட எங்கப்பா போறிங்க... அந்த ஊர்ல ஆளே இல்லையே” என்று ஆடு மேய்க்கும் பாட்டியின் கேலியைத் தாண்டி ஊருக்குள் வந்தடைந்தோம். குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லாமல் கொட்டகுளம் கிராமம் காத்தாடிப்போய் கிடந்தது. பழமையான காரைக்குடி ஸ்டைலில் வீடுகளைக் காண முடிந்தது. அதில் பலவும் இடிந்து மண்ணோடு மண்ணாகப் போய்விட்டன. ஆனால் இருக்கும் வீடுகளில் கூட ஆட்கள் இல்லை. நீண்ட நேரம் கடந்தும் யாரையும் சந்திக்க முடியவில்லை. வெகு நேரத்திற்குப் பின் ஜோடி இல்லாத ரேஸ் மாடு ஒன்றை மட்டும் கயிறுகட்டி இழுத்துவந்தார் மணிகண்டன். அவர் நம்மிடம் பேசத்தொடங்கினார்.

மணிகண்டன் கொட்டகுளம் கிராமம்

”எங்கள் கிராமம் 10 ஆண்டுகளுக்கு முன் மிகவும் செழிப்பாக இருந்த கிராமம். தற்போது கருவேல மரங்களால் காம்பவுண்டு சுவர் கட்டியது போல் வெறிச்சோடிக்கிடக்கு . எங்களுக்குப் பூர்விகம் கொடிக்குளம். எங்கள் முன்னோர்கள் இந்தக் கிராமத்துல விவசாயம் மட்டுமே செய்துவந்துள்ளனர். கொடிக்குளத்திற்கு தினமும் நடந்தே சென்று வேலைக்குத் திரும்பியுள்ளனர். நேரத்தையும் பணியையும் சுருக்க பின் இங்கேயே கொட்டகைகள் அமைத்து வசித்து வந்துள்ளனர். அதனாலே இந்தக் கிராமத்திற்கு கொட்டகுளம் என்று பெயர் வந்தது என எனக்கு மூத்தவங்க சொல்றத கேட்ருக்கேன். விவசாயத்தில் எங்கள் கிராமத்தினர் சக்கைபோடு போட்டுள்ளனர். அதனால் எங்கள் ஊரில் விவாயத்துக்கு வண்டிகட்டி வெளியூர்காரங்க வருவாங்க வேலைக்கு. இன்று வாகனங்கள் பெருத்த காலத்தில் எங்க ஊர் பக்கம் பஸ்கூட வந்ததில்லை. அதனால இங்க இருந்த மிச்ச குடும்பங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்து வெளியூருக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. 20,30 பெரிய பெரிய வீடுகளும் மற்றும் சில சிறிய வீடுகளும் இருந்தது. தீபாவளி கொண்டாடுறமோ இல்லையோ பொங்கல சிறப்பா கொண்டாடுவோம் . எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு, ரேஸ் மாடு, வண்டி மாடு, பசுமாடு ஏராளம் இருந்தது. இப்ப ஒரு சிலர் தான் வச்சுருக்காங்க. அதையும் வெளியூர்காரங்கதான் பாத்திக்கிறாங்க, கிட்டத்தட்ட 10 வருசமா மழை மிகவும் குறைந்து போச்சு. அதனால அணைகளில் கூட நீர் இல்ல. அதுக்கப்பறம் எங்க விவசாயம் செய்றது? பத்தாதுக்கு பக்கத்து ஊர்களில் குவாரிகள் வேற வந்துருச்சு. அதனால சுத்தமா தண்ணி வருவது நின்னு போச்சு. விவாசயத்த மட்டும் தான் இந்தக் கிராமம் நம்பி இருந்தது. விவசாயம் செய்யக்கூட தண்ணி இல்லாத அப்ப, எப்படி இங்க இருக்க முடியும்ணு ஊரில் இருந்த பலரும் கிளம்பிட்டாங்க. இப்ப 2 மூன்று குடும்பம் மட்டும் தான் இந்த ஊர்ல வசிக்கிறோம்” என்றார் .

கொட்டகுளம்

ஊரில் ஆட்கள் இல்லை என்றாலும் மக்கள் இங்கு நிம்மதியாய் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்குப் பல அடையாளங்கள் தென்பட்டது. அம்மி, உரல், கலப்பை என்று பழைய நினைவுகளைச் சற்றே அசைத்துப் பார்த்தது கொட்டகுளம் கிராமம். விவசாயத்திறாக உருவான கிராமம் இன்று சிதைந்து கிடப்பதைப் பார்த்து வேதனை மட்டுமே கொள்ளமுடிந்தது.இந்தக் கிராமத்தை பிரிய இயலாத சிலர் இன்னும் இங்குள்ள முகவரிலேயே வாக்கு அட்டை வைத்துள்ளனர் 

விவசாயமின்றி அழிந்துவரும் இக்கிராமத்தில் வீட்டுக்கதவுகளில் தொங்கும் பூட்டுகளும் கதவு எண்களுமே செழிப்பாக தெரிகிறது. விவசாயத்திற்காக உருவாக்கப்பட்டு விவசாயமின்றி இக்கிராமத்தைப் போன்று பல்வேறு கிராமங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் விவசாயம் காப்பாற்றப்படவேண்டும்.

 

 

.


டிரெண்டிங் @ விகடன்