163 கோடி ரூபாய் பணம்; 100 கிலோ தங்கம் - இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு | income tax raids Continues at highways contractor house

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (17/07/2018)

கடைசி தொடர்பு:10:05 (17/07/2018)

163 கோடி ரூபாய் பணம்; 100 கிலோ தங்கம் - இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக உள்ள செய்யாதுரை மற்றும் அவரது மகன் நாகராஜன் ஆகியோரது  வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. முதல்நாள் சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியதாகத் தகவல் வெளியானது. 

வருமானவரி சோதனையில் பணம் சிக்கியதாக தகவல்

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டடப் பணிகள் ஆகியவற்றின் ஒப்பந்ததாரராக இருப்பவர் செய்யாதுரை. விருதுநகரைச் சேர்ந்த இவருக்கு, நான்கு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள், வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீரென  சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. 

நேற்று ஒருநாள் முழுவதும் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத சுமார் 163 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாகவும் மேலும் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது.