'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்!' - சந்திப்பை நிராகரித்த ராகுல் | If we accpeted dinakaran, congress image only spoiled -says rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (17/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (17/07/2018)

'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்!' - சந்திப்பை நிராகரித்த ராகுல்

'இனி தினகரன் விஷயத்தை எடுத்துக் கொண்டு வர வேண்டாம்' என அந்த முன்னாள் எம்.பியிடம் கூறிவிட்டார் ராகுல். தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில் ப.சிதம்பரத்தின் பங்கு அதிகம் என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில்.

'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்!' - சந்திப்பை நிராகரித்த ராகுல்

ராகுல்காந்தியின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். `திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் இரஞ்சித் ஆகியோருக்குக் கிடைத்த வாய்ப்பு தினகரனுக்குக் கிடைக்கவில்லை. சசிகலா குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும் ராகுல் விரும்பவில்லை' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் வலுவான கூட்டணியை அமைக்க விரும்புகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அதன் ஒருகட்டமாக, தி.மு.கவின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும். `தி.மு.க கூட்டணியில்தான் நீடிக்கிறோம்' என காங்கிரஸ் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கூறிவந்தாலும், செயல் தலைவர் ஸ்டாலினிடமிருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. அதேநேரம், தி.மு.க அணியில் நமக்குரிய இடங்கள் உறுதி செய்யப்படாவிட்டால், அ.தி.மு.க அணியைத் தேர்வு செய்வது நல்லது' என சிதம்பரம் தரப்பினர் மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். சிதம்பரத்துக்கும் தி.மு.கவுக்கும் இடையில் இருக்கும் பழைய விவகாரங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருவது தொடர்பாக ராகுல்காந்தியை சந்திப்பதற்கான அனுமதி கேட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த நிமிடம் வரையில் சந்திப்பு குறித்து எந்தப் பதிலையும் காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை. 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ``ராகுல்காந்தியைச் சந்திப்பதற்குப் பலமுறை முயற்சி செய்துவிட்டார் தினகரன். இதற்காக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் எம்.பி சிந்தா மோகன் மூலமாக அவர் முயற்சி செய்திருக்கிறார். நடராசன் மூலமாகத்தான் சிந்தா மோகனின் அறிமுகம் தினகரனுக்குக் கிடைத்தது. டெல்லி சந்திப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. ஆர்.கே.நகரில் பெற்ற ஒரே ஒரு வெற்றியை முன்வைத்து, அவரை ஒரு பெரிய சக்தியாக ராகுல் பார்க்கவில்லை. அவரது சொந்த சமூக ஓட்டுகளும் சிறுபான்மையினரின் கணிசமான வாக்குகளும் அவருக்கு வந்து சேரலாம். ஆனால், தேர்தல் முடிவில் ஒற்றை இலக்கத்தில்தான் அவருக்கான வாய்ப்பு இருக்கிறது.

ப.சிதம்பரம்இதுகுறித்து ராகுலிடம் பேசிய காங்கிரஸ் முக்கியப் புள்ளி ஒருவர், `தினகரனுடன் சேர்ந்தால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் இமேஜ் கெடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். உதாரணமாக, ஜெயலலிதா மரணத்தை அகில இந்திய அளவில் பா.ஜ.க கொண்டு செல்லும். குஜராத், உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள பிராமணர்களை நம் பக்கம் கொண்டு வரக் கூடிய வேலைகளில் இறங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில், ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்கள் எனக் கருதக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடு சேருவதில் பலன் இருக்காது. தினகரன் வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவை தமிழ்நாட்டில் நம்முடைய கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றவர்கள் கையில் விட்டுவிடுவோம். தினகரன் தலைமையில் கூட்டணி வைக்கக்கூடிய அளவுக்கு அவர் செல்வாக்கானவர் இல்லை. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வலுக்கட்டாயமாக நமக்கு ஆதரவு கொடுத்தார் தினகரன். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புதிய சட்டசபை பதவியேற்பு விழாவுக்கும் அவரை நாம் அழைக்கவில்லை. அதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தலில் மோடி கேட்டுக் கொண்டதால் ஆதரவு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. தினகரனோ, பா.ஜ.க ஆதரவு கேட்காமலேயே வலியப் போய் ஆதரவு கொடுத்தார். காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்காக மோடியின் ஆளாக இவர் இருப்பாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது' என விரிவாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, `இனி தினகரன் விஷயத்தை எடுத்துக்கொண்டு வர வேண்டாம்' என அந்த முன்னாள் எம்.பியிடம் கூறிவிட்டார் ராகுல். தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில் ப.சிதம்பரத்தின் பங்கு அதிகம். தொடக்கத்தில் தினகரன் தலைமையில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் திருநாவுக்கரசர். டெல்லி ஹை கமாண்ட் விரும்பாததால், `எங்கள் கூட்டணியில் தினகரன் இணைய வேண்டும்' என்றார். இதனை எதிர்பார்க்காத தினகரன், `போகாத ஊருக்கு வழி சொல்கிறார்' என திருநாவுக்கரசருக்குப் பதில் கூறிவிட்டார்" என்றார் விரிவாக.
 


[X] Close

[X] Close