``இப்பத்தான் என் பொண்டாட்டிக்கு அவ மக இறந்ததே தெரியுது!'' - கலங்கும் `நீட் பிரதீபா'வின் தந்தை | "What is the answer for my daughter's death? " Asks Prathiba's father

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (17/07/2018)

கடைசி தொடர்பு:12:37 (17/07/2018)

``இப்பத்தான் என் பொண்டாட்டிக்கு அவ மக இறந்ததே தெரியுது!'' - கலங்கும் `நீட் பிரதீபா'வின் தந்தை

``இப்பத்தான் என் பொண்டாட்டிக்கு அவ மக இறந்ததே தெரியுது!'' - கலங்கும் `நீட் பிரதீபா'வின் தந்தை

`நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. அதனால், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு வினா ஒன்றுக்கு 4 மதிப்பெண் மூலம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ``ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தவறாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்” என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

பிரதீபா

+2 பொதுத் தேர்வில் 1165 மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் மாணவி அனிதாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது மாணவி இவர். தீர்ப்பு குறித்து பிரதீபாவின் அப்பா சண்முகத்திடம் பேசினோம்.

``காசு, பணம் இல்லைன்னாலும் கலகலனு இருந்த வீடு எங்களோடது. இப்போ, எங்க கடைக்குட்டி (பிரதீபா) இல்லாம மயானம் மாதிரி கெடக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக்கறோமே தவிர, பிரதீபா இல்லைங்கிறதை யாராலயும் ஏத்துக்க முடியலை.

நீட்

என் பொண்ணு விஷம் குடிச்சுட்டான்னு தெரிஞ்சதும், என் மனைவிக்கு சுயநினைவு போயிடுச்சு. பிரதீபாவை கண்ணாடிப் பெட்டில வெச்சிருக்கிறதுகூடத் தெரியாம, சாவுக்கு வந்தவங்ககிட்ட, `என் பொண்ணு யாருகிட்டயும் பேச மாட்றா. கண்ணாடி ரூமிலிருந்து அவளை டிஸ்சார்ஜ் பண்ணுங்க. வீட்டுக்கு வந்துட்டா எங்க எல்லாருகிட்டயும் பேசுவா டாக்டர்’னு கெஞ்சுட்டே இருந்தாங்க. அதைக் கேட்க கேட்க இதயம் சுக்குநூறாப் போயிடுச்சு. ஆசை ஆசையா வளர்த்த பொண்ணை அடக்கம் பண்ணினதுகூட தெரியாம, அடுப்படியில் காபி போட்டுக்கிட்டுருந்தாங்க. இப்போதான் அவங்களுக்கு என் பொண்ணு இறந்ததே நினைவுக்கு வந்திருக்கு. தினமும் காலையிலும் சாயங்காலமும் சுடுகாட்டுக்குப் போய் அழுதுட்டு வர்றாங்க. எப்படி அவங்களுக்கு ஆறுதல் சொல்றதுன்னே தெரியலே'' எனத் தொண்டை அடைக்க விம்முகிறார்.

பிரதீபா

``மதுரை நீதிமன்றம் குடுத்திருக்கும் தீர்ப்பு, என் மகளின் ஆன்மாவை சாந்தப்படுத்தும்னு நம்புறேன். தமிழ்நாட்டுல இருக்கும் எல்லா புள்ளைகளுமே என் பொண்ணுக்குச் சகோதர சகோதரிகள்தாம். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் கனவுகளை நிறைவேற்றப் போகும் இந்தத் தீர்ப்பை, ஒரு தகப்பனாக மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அதேநேரம், என் பொண்ணு அவரசப்பட்டுட்டாளேன்னு நினைக்கும்போதுதான் நெஞ்சுக்குழி அடைக்குது. அவளின் அந்த முடிவுக்கு யாரு காரணம்? நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, அவரசர அவசரமாக ரிசல்ட்டை வெளியிட்டது ஏன்? 5-ம் தேதிதான் ரிசல்ட்னு அறிவிச்சவங்க, அதுக்கு முதல் நாள் மாலையே வெளியிட்டது ஏன்? இன்னைக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி கேட்டதைத்தானே அன்னைக்கு பிரதீபா உட்பட எல்லா மாணவர்களும் கேட்டுக் கதறினாங்க ? ஒருபடி மேலே போய், தேர்வு ஆணையத்துக்கு லெட்டரே எழுதினாள் பிரதீபா. இன்னைக்கு சி.பி.எஸ்.இ-யிடம் நீதிமன்றம் கேட்ட கேள்விகளை, தமிழக அரசு அன்னைக்கே கேட்டிருக்கணும். குறைந்தபட்ச எதிர்ப்பைத் தமிழக அரசு காட்டியிருந்தாலே என் பொண்ணு உயிரோடு இருந்திருப்பாளே'' எனக் கதறுகிறார் சண்முகம்.

பிரதீபா-சண்முகம்

ரங்கராஜன் எம்.பி., தாக்கல் செய்த மனுவுக்கு `நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் சொல்வதை ஏற்க முடியாது. தேர்வை நடத்துவது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் வினாத்தாளை மொழிபெயர்ப்பு செய்யும்போது, தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இயால் உறுதிசெய்ய முடியாது’ என சர்வ சாதாரணமாகவும் ஆணவத்தோடும் பதில் சொன்னது சிபிஎஸ்இ.

அதற்கு, ``பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது எப்படி? அதுவும் இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாளே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? 

 

தற்கொலை

 

யார் கருத்தையும் கேக்காம சிபிஎஸ்இ சர்வாதிகாரத்தோடு செயல்படுது”னு நீதிபதிகள் கடுமையாப் பேசியிருக்காங்க. அப்போதும், தமிழக அரசு வாய் திறக்கலை. இப்போ, சிபிஎஸ்இ செய்தது தப்பு. அதனால், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மார்க் குடுக்கணும்னு நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. அப்படின்னா, என் பொண்ணு சாவுக்கு என்ன சொல்லப்போகுது இந்த அரசு? இறந்துபோன என் பொண்ணு உயிரைத் திரும்பக் கொடுக்குமா? என் பொண்ணு சாவுக்கு அரசுதான் காரணம். என் பொண்ணு சாவுக்கு நீதி கிடைக்கற வரை நான் போராடுவேன். நீதிமன்றத்தில் அரசு மேலே எப்படி வழக்குப் போடறதுனு எனக்குத் தெரியலை. சட்டம் தெரிஞ்ச நல்ல மனுஷங்க யாராவது எனக்கு உதவி பண்ணுவாங்கனு நம்பறேன்” என்றார் கண்ணீருடன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்