வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:45 (17/07/2018)

மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை!- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர் 

மாற்றுத் திறனாளி மாணவி விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள்.

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட 17 பேரைக் கைது செய்துள்ளனர் போலீஸார். 

அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவரின் தாயார். அவரது புகாரில், `என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீஸார் 17 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார் மகிளா நீதிமன்ற நீதிபதி சரிதா. தற்போது இந்த 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``சிறுமி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 350 வீடுகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவ்வளவு எளிதில் வெளிநபர்கள் உள்ளே செல்ல முடியாது. அந்தளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது. குடியிருப்பின் பராமரிப்புக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கூட்டரங்கு என அனைத்து வசதிகளும் உள்ளன. காதுகேளாத அந்த மாணவி, எல்லோரிடமும் சகஜமாகவும் வெகுளித்தனமாகவும் பேசுவார். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல தினமும் அவர் லிப்ட்டில்தான் வருவார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட லிப்ட் ஆபரேட்டர் ரவிகுமார், மற்ற ஊழியர்களிடமும் தெரிவித்திருக்கிறார். மற்றவர்களும் மாணவியிடம் தொடர்ந்து அத்துமீறியுள்ளனர். தனக்கு நடந்த கொடுமைகளை மாணவியும் வெளியில் சொல்லவில்லை. `அங்கிள்' என வெகுளித்தனமாகப் பழகியதை இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். 

இந்நிலையில், மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகுதான் நடந்த கொடுமைகள் அனைத்தும் தெரியவந்தன. முதலில் இதுகுறித்து மாணவி எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. பின்னர், மாணவியின் சகோதரி மூலமாக அனைத்துத் தகவல்களையும் சேகரித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட முருகேஷ், பரமசிவம், ரவிக்குமார், பிளம்பர் ஜெய்கணேஷ், லிப்ட் ஆபரேட்டர் பாபு, காவலாளி பழனி, லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன், இறால் பிரகாஷ், பிளம்பர்கள் ராஜா, சூர்யா உள்பட 17 பேர் மீதும் கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என்கின்றனர்.