அச்சுறுத்தும் யானைக் கூட்டம்... கண்டுகொள்ளாத வனத்துறை... கொந்தளித்த மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள், இன்று காலை இரண்டு யானைகள் நுழைந்தன. இதை அறியாமல், காலை சுமார் 6.15 மணியளவில் மதரசா பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள்  மற்றும் முதியவர் ஒருவரும் யானைகளைப் பார்த்து பயந்து ஓடியதில், கீழே விழுந்து காயமடைந்தனர்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த முதியவர் அப்துல் ரஹ்மான் (53), சிறுமி ரிஷானா ( 8 ) ஆகியோரை மீட்டு ,கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஆத்திரமடைந்த தாெரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாெதுமக்கள், அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி, கூடலுார், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை வனத்துறையினர் மற்றும் கூடலுார் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து பாெதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், சுமார் 1.30 மணி நேர சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து தொரப்பள்ளி பகுதி பாெதுமக்கள் கூறுகையில், ‛‛யானைகள் தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள் நுழைவது தொடர் கதையாகி வருகிறது. வனத்துறையினர் அமைத்துள்ள டிரஞ்ச்சுகளை முறையாகப் பராமரிக்காததே யானைகள் ஊருக்குள் நுழையக் காரணமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும், தாெரப்பள்ளியில் யானைகளால் கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. அல்லூர் பகுதியில், முதியவர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இன்று யானைகளைக் கண்டு பயந்து ஓடியதில் இருவர் காயமடைந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறிய வனத்துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா,  வரும் 15 நாள்களில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுச்  சென்றோம்’’என்றார்கள் .


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!