அ.தி.மு.க-வா... எம்.ஜி.ஆர் தொண்டர்களா?! பரபரக்கும் களம்

`உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு' சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.

அ.தி.மு.க-வா... எம்.ஜி.ஆர் தொண்டர்களா?! பரபரக்கும் களம்

அ.தி.மு.க என்ற கட்சியிலும், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியிலும் பொறுப்புகளிலும், பதவியிலும் இருப்பவர்களுக்கு எம்.ஜி.ஆர் என்ற அவர்களின் தலைவரை நினைக்க நேரமில்லை; ஆனால், எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருந்து, அதன்பின் அரசியலுக்கு வந்து, கல்வித் தந்தைகளாக ஆனவர்கள் எம்.ஜி.ஆரை மறப்பதில்லை என்பதற்கு உதாரணமாக நடந்து முடிந்திருக்கிறது `உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு'. சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்த மாநாடு தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதையும் லேசாகக் கோடிட்டுக் காட்டியது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி.கணேஷ், `மனித நேயம் அறக்கட்டளை' நிறுவனர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் பலகலைக்கழக வேந்தர் ஏ.சி சண்முகம், சத்தியபாமா பலகலைக்கழக வேந்தர் மரியஸீனா, எம்.ஜி.ஆரின் வளர்ப்புமகள் சுதா, பழம்பெரும் நடிகை லதா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். 

எம்.ஜி.ஆர் மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

காலை 9 மணிமுதல் மாலை 7.30 மணி வரை நடைபெற்ற இந்த `உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டு'க்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு வி.ஐ.பி.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான எம்.ஜி.ஆர் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். கிராமிய கலைநிகழ்ச்சிகள், சினிமா ஸ்டன்ட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. அனிமேஷனில் உருவாகியிருக்கும் எம்.ஜி.ஆர் படமான `கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' திரைப்படத்தின் ஆடியோவும் வெளியிடப்பட்டது.

மாநாட்டில், எம்.ஜி.ஆர் பெயரில் 1000 கோடி ரூபாயில் நற்பணி செய்ய வேண்டும்; எம்.ஜி.ஆரால் பயனடைந்தோர், நல்ல நிலைமையில் இருக்கும் ஆயிரம் பேர் தலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும்; இதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது பெயரில் இருக்கும் சொத்தை விற்று முதற்கட்டமாக ரூபாய் 40 கோடி தரவிருப்பதாக சைதை துரைசாமி தெரிவித்தார். இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என மாநாடு கமிட்டி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு தனது உரையில் பதில் சொன்ன ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ``எம்.ஜி.ஆர் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும், கொடை வள்ளலாகவும் வாழ்ந்தவர். மேலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர். இவர் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வைப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசு கவனத்துக்கு நான் கொண்டு செல்வேன்” என்று உறுதியளித்தார்.

உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு...

அதன்பிறகு, `எம்.ஜி.ஆர் பிறந்தநாளை `மனித நேய' நாளாக அரசு அறிவிக்க வேண்டும்' எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது. மாலை 5 மணிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மாநாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார். அ.தி.மு.க.வில் இருப்பவர்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டபோதிலும் யாரும் இந்த மாநாட்டுக்கு வரவில்லை. ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் இந்த மாநாட்டுக்கு வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு...

அ.தி.மு.க சார்பில் கடந்த சில மாதங்களாகப் பலநூறு கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மக்களுக்கான நல்ல திட்டங்களோ, அல்லது எம்.ஜி.ஆர் புகழை வளர்க்கும் அறிவிப்புகளோ அ.தி.மு.க அரசால் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் `உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரிதிநிதிகள் மாநாடு' எம்.ஜி.ஆரின் புகழை வளர்ப்பதற்காகப் பல தீர்மானங்களை இயற்றியது கவனிக்க வைத்தது. மேலும், இந்த மாநாடு அ.தி.மு.க வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!