திருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி திருக்கோயிலில் 20-ம் தேதி ஆடித்திருவிழா தொடக்கம்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித் திருவிழா வரும் ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறுகிறது. 

ஆடித்திருவிழா

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர் அவதாரபதி திருக்கோயில். சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அனைவரும் இக்கோயிலுக்கும் வந்துசெல்வது வழக்கம். 186-வது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா, வரும் ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 11 நாள்கள்  நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, 20-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது.  திருக்கோயிலைச் சுற்றி கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டு, 5 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடைபெறுகிறது.

இத்திருவிழா நாள்களில், தினமும் மாலையில் புஷ்பவாகனம், அன்னவாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி, பதியைச் சுற்றி பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 11-ம் திருவிழாவான 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறுகிறது.  திருவிழா நாள்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!