வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (17/07/2018)

கடைசி தொடர்பு:16:10 (17/07/2018)

மும்மதத்தினர் பங்கேற்கும் தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய ஆடித் திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை அனைத்து சமய மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சந்தியாகப்பர் திருவிழா கொடியேற்றம்
 

தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். தீவு மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் சந்தியாகப்பரின் ஆலயம் இந்து, இஸ்லாமிய , கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்களின் அடையாளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் தீவுப் பகுதியைச் சேர்ந்த மும்மத மக்களும் பங்கேற்று சந்தியாகப்பரை வழிபடுவது வழக்கம்.

மீனவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வழிபடும் சந்தியாகப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி நாகேந்திரன், தங்கச்சிமடம் ஜமாத் நிர்வாகிகள் பசீர், ரபாணி ஆகியோர் முன்னிலையில் சிவகங்கை மறை மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத் தந்தை இருதயராஜ் திருவிழாக் கொடியை ஏற்றினார். இதைத்தொடர்ந்து பங்குத் தந்தையர்கள் ஜான்கென்னடி, ராஜ் மோகன் ஆகியோர் திருப்பலி நடத்தினர். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இம்மாதம் 24-ம் தேதி இரவு நடக்கிறது. மறுநாள் காலை சிறப்பு திருப்பலி திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் தீவுப் பகுதி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சந்தியாதாஸ் தலைமையிலான விழாக் குழு செய்துள்ளது.