'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்!' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி

'பா.ஜ.க-வை எதிர்க்கக் கூடிய கட்சிகள் அனைத்தும் என்னை ஆதரித்துத்தான் ஆக வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்!' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நடந்துவரும் வருமான வரித்துறை சோதனைகளை அச்சத்தோடு கவனிக்கத் தொடங்கியுள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள். 'மோடியை எதிர்க்கக் கூடிய கட்சிகள் அனைத்தும் என்னை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்படும்' எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் முதல்நிலை ஒப்பந்ததாரராக இருக்கும் செய்யாதுரையை குறிவைத்து, இரண்டாவது நாளாக ஐ.டி சோதனை நடந்து வருகிறது. அண்ணா தி.மு.க அரசில் கடந்த ஏழு ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றைக் கையில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது துறையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் துருவிக் கொண்டிருப்பதை கொங்கு மண்டல அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசின் ஆட்டத்தைத் தணிக்கும் வேலைகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் வீட்டில் நடக்கும் சோதனை குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார அதிகாரி ஒருவர், ``நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தப் பணிகளை செய்யாதுரையே செய்து வருகிறார். அவரைத் தாண்டி வேறு எந்த ஒப்பந்ததாரரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. அந்தளவுக்கு எடப்பாடியின் அன்பைப் பெற்றவர். மாட்டுத் தாவணி முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச் சாலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகள் எனப் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளைச் செய்து வருகிறார்.

 வருமான வரித்துறை சோதனை

இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனையில், செய்யாதுரைக்குச் சொந்தமான வீடுகள், நட்சத்திர விடுதி உள்பட 16 இடங்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.வி.எச் என்ற நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். அவரது வீட்டில் நின்றிருந்த கார், செய்யாத்துரைக்குச் சொந்தமானது. இதன்மூலம், நெடுஞ்சாலைப் பணிகளில் தி.மு.க-வினரின் தொடர்புகளும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் 160 கோடி ரூபாயும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டதாக ஐ.டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு முதல்தர ஒப்பந்ததாரரிடம் இவ்வளவு தொகைகள் இருப்பது சாதாரணமானதுதான் என்றாலும், செய்யாத்துரை மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் வாங்கும் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர். அடுத்து வரக் கூடிய நாள்களில் முதலமைச்சருக்கு வேண்டப்பட்ட அவரது துறை அதிகாரிகள் வளைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்" என்றார் விரிவாக. 

திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறைக்குள் ஐ.டி சோதனை நடைபெறுவதை இயல்பாகவே கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அமைச்சர்கள் சிலரிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்த விவாதத்தின்போது, 'மத்திய அரசின் ஒரு நாடு ஒரு தேர்தல் முயற்சிக்கு எதிராக சட்டப் பணிகள் ஆணையக் குழுவில் நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்ததை மோடி எதிர்பார்க்கவில்லை. அதன் ஒருபகுதியாகத்தான் ரெய்டை நடத்துகிறார்கள்' என ஒருவர் குறிப்பிட, இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 'என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்போம். ஆட்சிக்கு சிக்கலை உருவாக்க நினைத்தாலும் சபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன். அப்படியொரு சூழல் வரும்போது, அந்த நேரத்தில் எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் கட்சிகளில் யாரெல்லாம் என்னை ஆதரிக்கிறார்கள், யாரெல்லாம் என்னை ஆதரிக்கவில்லை என்பது அப்போது தெரியும். பா.ஜ.கவை எதிர்க்கக் கூடிய கட்சிகள் அனைத்தும் என்னை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி என்னை நிரூபிப்பேன்' எனக் கூறியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!