செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை கேத் லேப்! - நிறைவேறிய மக்களின் பல ஆண்டு கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிமுக்கியமான மருத்துவமனைகளில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தலைமையானது. கிழக்கு கடற்கரை சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தினம்தினம் ஏற்படும் விபத்துகளுக்கு இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுபோல் இப்பகுதி மக்களுக்கு திடீரென ஏற்படும் நெஞ்சுவலிக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். மாவட்டத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இதை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதய சிகிச்சை கேத் லேப்

நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்துவது என எந்த வசதியும் கிடையாது. இதனால் அவசரத்துக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னைக்குப் பரிந்துரை செய்வார்கள். போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலர் பாதியிலேயே உயிரிழக்க நேரிடும். இதனால் இப்பகுதியில் ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் பொருத்துதல் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்துவந்ததன் பயனாக, 5 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக இதயநோய் சிகிச்சைக்காக நவீன கேத் லேப் தொடங்கப்பட்டுள்ளது. இனி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதயநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது என்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!