வாஞ்சிநாதன் 132-வது பிறந்த தினம்: அரசு சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த தினத்தையொட்டி அரசு சார்பாக அவரின் உருவச் சிலைக்கு நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாஞ்சிநாதன்

தமிழக அரசின் சார்பில் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கலந்துகொண்டார். அப்போது வாஞ்சிநாதன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். 

அதைத்தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ``நெல்லை மாவட்டத்தில் பிறந்த வாஞ்சிநாதன், நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிரைத் துறந்தவர். அவரின் சரியான பிறந்த தினம் தெரியாததால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தியாகிகள் தினத்தன்று வாஞ்சிநாதன் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்தார். 

அதன் அடிப்படையில் அரசின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அவரின் பிறந்த நாள் விழா, தியாகிகள் தினத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களின் வரலாறுகளை மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் தியாகிகளின் வரலாறுகளை அறிந்துகொள்ள முடியும்’’ எனப் பேசினார். 

இந்த விழாவில், தென்காசி கோட்டாட்சியர் சௌந்தரராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராஜா, செங்கோட்டை வட்டாட்சியர் செல்வகுமார், மணிமண்டபக் காப்பாளர் பி.ஆனந்த்குமார், வாசகர் வட்டச் செயலாளர் செண்பக குற்றாலம், பேராசிரியர் கலா மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!