வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (17/07/2018)

கடைசி தொடர்பு:17:50 (17/07/2018)

அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

Farmers

நாகை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்துவரும் விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவியாய்த் தவிக்கிறார்கள்.

நெல்

இதுபற்றி, விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், நாகை கலெக்டர் சுரேஷ்குமாருக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  

ஆறுபாதி கல்யாணம்ஆறுபாதி கல்யாணத்திடம் பேசியபோது, ``நாகை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலத்தடி நீரைக்கொண்டு போர்வெல் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது தொடங்கியுள்ள நெல் அறுவடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் முழுவீச்சில் நடைபெறும். ஆனால், தற்போது அறுவடை செய்த நெல்லை தனியார் இடைத்தரகர்கள் தமிழக அரசின் கொள்முதல் விலையைவிட குவிண்டாலுக்கு ரூ.200 குறைத்து, கடனுக்கு கொள்முதல் செய்கின்றனர். வீட்டில் நெல்லை இருப்பு வைத்துக்கொள்ள முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர்களிடமே இந்த நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஆளாக்கப்படுகிறார்கள். இப்படி கடனுக்குக் கொள்முதல் செய்யும் நெல்லை அருகிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று நாகை மாவட்ட விவசாயிகளை நஷ்டப்படுத்தி வருகிறார்கள்.  

எனவே, நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை கோட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள இடங்களில் தாலுக்காவுக்கு குறைந்தபட்சம் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டியது அவசியம், அவசரம்.  தண்ணீரின்றி கஷ்டப்பட்டு, சாகுபடி செய்து அறுவடை செய்த விவசாயிகளை நஷ்டமடையாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் தற்போதுள்ள பருவத்துக்கு நெல்லுக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு பொது ரகம் ரூ.1,750 முதல் ரகம் ரூ.1,770 என்று அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வோடு தமிழக அரசு ஊக்கத்தொகையும் உயர்த்தி சேர்த்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று முடித்தார்.