மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல்? - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை 

 


மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'குடும்பச் சூழ்நிலையால் தவறு செய்துவிட்டோம்'  என போலீஸில் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள். 

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்துவரும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குக் கடந்த ஏழு மாதங்களாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர் அங்கு பணியாற்றும் ஊழியர்கள். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் அளித்த புகாரை அடுத்து, 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் போலீஸார். அப்போது, `குடும்பச் சூழ்நிலையால் இந்தத் தவற்றைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்' என போலீஸாரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார் ரவிக்குமார். வயதானவர் என்பதால் அவரிடம் மாணவி பழகியதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரால் மாணவிக்கு நிகழ்ந்த கொடுமையைக் கேள்விப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். `ரவிக்குமார் உட்பட 17 பேருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும்' என போலீஸாரிடம் ஆவேசமாகக் கூறியுள்ளனர் மாணவியின் உறவினர்கள். 

வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் தாயார் அளித்த புகாரில் 15 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முதலில் ஆறு பேரைக் கைது செய்த போலீஸார், இன்று காலை 11 பேர் மீது நடவடிக்கை எடுத்தனர். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் லிஃப்ட் ஆபரேட்டர் ரவியின் பெயரைத்தான் சொல்லியுள்ளனர். இந்த விவகாரம் குறித்துப் பேசும் போலீஸார், ``மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்குத் தனிமைதான் முக்கிய காரணம். பள்ளியை விட்டு வீட்டுக்கு வரும் மாணவி, பெற்றோர் துணையாக இல்லாமல் தனிமையில் இருந்திருக்கிறார். தொடர்ந்து குடியிருப்பில் வேலை பார்ப்பவர்களிடம் சகஜமாகப் பழகியுள்ளார். இதை நோட்டமிட்டவர்கள், மாணவியிடம் தவறாக நடந்துள்ளனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதை அவரின் பெற்றோரிடம் தெரியப்படுத்தியுள்ளார். தற்போதுகூட வயிற்றுவலிக்கு சிகிச்சைக்குச் சென்றபோதுதான் மொத்த கொடுமையும் வெளியில் தெரியவந்தது. மாணவியிடம் தவறாக நடந்தவர்களில் சிலர் வேலையைவிட்டு நின்றுவிட்டனர்" என்கின்றனர். 

இந்நிலையில், மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். வடசென்னையைச் சேர்ந்த கும்பலிடம் இருந்துதான், அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்களுக்கு மயக்க மருந்து கிடைத்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு நியமிக்கப்பட்டவர்கள், அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் நடத்தி வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தை மறைக்க அந்தப் பிரமுகர் தரப்பில் போலீஸாருக்கு அழுத்தம் வந்துள்ளது. அப்போது, மாணவிக்கு நிகழ்ந்த கொடுமையைப் போலீஸார் தெரிவித்ததும் அந்தப் பிரமுகர் அமைதியாகிவிட்டாராம்.

மயக்க ஊசி போட்டு மாணவியிடம் தவறாக நடந்ததாகத் தகவல் வெளியானதும் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு இன்று காலை போலீஸார் சென்றனர். அங்கு ஒவ்வோர் இடமாகப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஊசி, மருந்து பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். 

மாணவி விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிவருவதால் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பே பரபரப்பாகக் காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!