``இந்த வருஷம் சம்பாவும் இருக்கு... ஆடிப்பெருக்கும் இருக்குடோய்!" - மகிழ்ச்சியில் டெல்டா மக்கள்

சம்பா சாகுபடியோடு குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் உளுந்து, பயிரையும் உரிய காலத்தில் சாகுபடி செய்யமுடியும். இவை அனைத்துக்கும் பயன்படும்படியாக மேட்டூர் அணை தற்போது திறந்துவிடப்படுவது விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``இந்த வருஷம் சம்பாவும் இருக்கு... ஆடிப்பெருக்கும் இருக்குடோய்!

மேட்டூர் அணையில் காவிரி தண்ணீர் 90 அடியைத் தாண்டிவிட்டதால் சம்பா சாகுபடிக்கு ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இப்படியிருந்த காலங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியும் நடந்தது. தாளடி இல்லாதபட்சத்தில் உளுந்து, பயிர் போன்ற தானியங்களைச் சாகுபடி செய்து வந்தனர். ஆனால், காவிரித் தண்ணீர் பிரச்னை காரணமாகக் கடந்த 7 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேட்டூர் அணையைத் திறக்க முடியாதபடி நீர் வரத்து குறைவாகவே இருந்தது. எனவே, நிலத்தடி நீரைக்கொண்டு போர்வெல் உள்ள விவசாயிகள் மட்டுமே குறைந்த அளவில் குறுவை சாகுபடியைச் செய்து வருகிறார்கள். ஆனால், தற்போதுள்ள நிலையில் குறுவை சாகுபடி செய்ய முடியாது. காரணம், அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. 

காவிரி டெல்டா

கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் ஒரு லட்சம் கன அடி நீர் மேட்டூருக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டாவது சம்பா சாகுபடியைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே துளிர்விட்டுள்ளது. இந்தக் காலகட்டத்திலேயே சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கினால்தான் பயிர்கள் வளர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் பொழியும் வடகிழக்குப் பருவ மழையை எதிர்க்கொள்ள முடியும்.  

இது பற்றி டெல்டா பகுதி விவசாயிகளிடம் பேசியபோது, ``கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்துப்போனதால் கடுமையான வறட்சி தமிழத்தில் சூழ்ந்தது. எவ்வளவு முயன்றும் காவிரி தண்ணீரும் கிடைக்கவில்லை. டெல்லி வரை சென்று போராடியும் எந்தப் பயனும் இல்லை. இதனால் ஆசைஆசையாய் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் கருகின. அக்கம்பக்கத்திலும் வங்கிகளிலும் கடன் வாங்கி செய்த சம்பா சாகுபடி கருகியதால் அந்த வேதனையிலிருந்து மீளமுடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்ட கொடுமையும் நடந்தது. ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும், மேலும், அதிக நீர்வரத்து இருப்பதாலும் எதிர்வரும் 19-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவரித் தாய்க்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, வளையல் மற்றும் பழங்கள் என மங்கலப் பொருள்கள் கொடுத்து வணங்கி வரவேற்கும் புனித நிகழ்ச்சியான `ஆடிப் பெருக்கு' விழா, காவிரி ஆற்றில் கொண்டாடி பல ஆண்டுகளாகிவிட்டது. காவிரி கரையோர மக்களின் பெரும் நம்பிக்கையாகத் திகழும் ஆடிப் பெருக்கு விழாவை இந்தாண்டு கொண்டாடி மகிழும் தருணம் மக்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சம்பா சாகுபடியோடு குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் உளுந்து, பயிரையும் உரிய காலத்தில் சாகுபடி செய்யமுடியும். இவை அனைத்துக்கும் பயன்படும்படியாக மேட்டூர் அணை தற்போது திறந்துவிடப்படுவது விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

காவிரியின் வறண்ட நாளங்களில் புதுரத்தம் பாய இருப்பதை இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் டெல்டா மக்கள்... மொத்த தமிழக மக்களும்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!