தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா: 4-ம் கட்டமாகச் சுத்தப்படுத்தும் பணி | fourth phase of thamiraparani river cleaning to be done soon

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (17/07/2018)

தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா: 4-ம் கட்டமாகச் சுத்தப்படுத்தும் பணி

இந்தியாவின் புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தாமிரபரணி ஆற்றில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 4-ம் கட்டமாக சுத்தப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.

தாமிரபரணி புஷ்கரம்

தாமிரபரணியில் நடைபெறும் புஷ்கர விழாவில் நாடு முழுவதிலும் இருந்து சாதுக்களும் பக்தர்களும் வருகை தர உள்ளனர். அதனால் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில் 4-ம் கட்டமாக சுத்தப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. 

அப்போது பேசிய அவர், ``தாமிரபரணி ஆற்றின் கரைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. தற்போது நான்காம் கட்டமாக தூய்மைப் பணிகளுக்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இரு தினங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல் நாளில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள், ஆக்கிரமிப்புகளை ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படும். இரண்டாம் நாளில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை 144-க்கும் அதிகமான பகுதிகளாகப் பிரித்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் வேளாண்மைத் துறையினர், விவசாயப் பெருமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகள் சேர்ந்த 15,000-க்கும் அதிகமானோர் ஈடுபட இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார். இந்தப் பணிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பான வகையில் நடைபெற்று வருகின்றன’’ எனத் தெரிவித்தார்.