’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை!  

செய்தியாளர்   ஷாலினி


ஊடகவியலாளர்களிடையே 'அண்ணா... அக்கா’ என்று அழைத்தபடி வளைய வந்த துறுதுறுப்பான செய்தியாளர் ஷாலினி... இப்போது இல்லை! இரண்டு ஆண்டுகளே ஊடகத்துறையில் பணியாற்றியவர், ஒரு அகால விபத்தில் கடந்த 15-ம் தேதி மரணமடைந்துவிட்டார்.  

ஈரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கோவலன் இரண்டாவது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், ரஞ்சனி தம்பதிக்கு திருமணமாகி நீண்ட காலமாக குழந்தையில்லை. பல வேண்டுதல்களுக்குப்பிறகு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஷாலினி, சர்மிளா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். சிறுவயது முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட ஷாலினி, பள்ளியிலும் கல்லூரியிலும் இலக்கியம், கட்டுரை, கவிதை எழுதி தனித்திறமையை வெளிப்படுத்தினார். சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோவையில் முதுகலை எலெக்ட்ரானிக்ஸ் மீடியா படித்தார். நியூஸ் 7 தொலைக்காட்சியில் பயிற்சியை முடித்த அவர், மாலை முரசு தொலைக்காட்சியில் நிருபராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். முதலில் அனைத்து பீட்களிலும் செய்தியை சேகரித்த அவரின் திறமையைப் பார்த்து தலைமைச் செயலக பீட் கொடுக்கப்பட்டது.

அண்ணா, அக்கா என்ற அவரின் வார்த்தைகளில் அவ்வளவு பாசம் இருக்கும். எல்லோரிடமும் அன்பாகப் பழகும் ஷாலினி, கடிந்து யாரிடமும் பேசியதில்லை. மகிழ்ச்சி, சோகம் என்றால் கவிதை அவரிடமிருந்து ஊற்றெடுக்கும். கவிதை மூலமாகவே சமூக வலைதளங்களில் அதிகம் பேசி பதிலடி கொடுப்பார். அலுவலகத்திலும், அவர் தங்கியிருந்த கோடம்பாக்கம் விடுதியிலும் ஷாலினியை எல்லாருக்கும் பிடிக்கும். அவ்வளவு பிரியமும் நேசமுமாக பழகுவார்.  கடந்த 14-ம் தேதி தன்னுடைய பிறந்தநாள், பெற்றோரின் திருமண நாள் ஆகியவற்றைக் கொண்டாட, சென்னையிலிருந்து நண்பர்களுடன் சொந்த ஊருக்குச் சென்றார். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மதுரையை நோக்கி அவர்கள் கடந்த 15-ம் தேதி சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அகால மரணமடைந்தார் ஷாலினி.

ஊடகத்துறையில் கடந்த இரண்டே ஆண்டுகள் அவர் பணியாற்றினாலும், அழுத்தமான முத்திரை பதித்துச் சென்றிருக்கிறார். ஷாலினியின் நண்பரும் செய்தியாளருமான சந்துரு நம்மிடம், ``தேடி அலைந்து செய்திகளைச் சேகரிப்பதில் சலிக்கவே மாட்டார். எந்த அசைமென்ட் கொடுத்தாலும் அதைச் சிறப்பாக முடிப்பார். பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்களோடு பாசமாக இருப்பார். எவரிடமும் மரியாதையாகப் பேசுவார். ஷாலினிக்கு குடும்பத்தினரோடு அதிக பாசம். மாதத்தில் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு வருவார். ப்ச்... அவரது இழப்பை நம்பவும் முடியவில்லை... தாங்கவும் முடியவில்லை!’’ என்றார்.

ஷாலினி, மீடியாவில் பணியாற்றினாலும் அவரின் லட்சியம் சினிமா. அதைநோக்கித்தான் அவரின் பயணம் இருந்தது. கல்லூரி படிக்கும்போது `எச்சில்’ என்ற குறும்படம் இயக்கினார். அதற்கு இன்னமும் சமூகவலைதளத்தில் ஒரு வரவேற்பு இருந்துவருகிறது. பாரதியார் மீது தீராத பற்றுகொண்ட அவர், ’பாரதியாழ்’ என புனைப்பெயர் வைத்துக்கொண்டார். அவரின் படைப்புகளில் பெண்ணுரிமைக்கான வரிகள் மேலோங்கி நிற்கும். பேச்சிலும் சரி, அவரின் செயல்பாட்டிலும் பெண்ணுரிமை எதிரொலிக்கும். 

`பெண்கள் திருப்பி அடித்தால்' என்ற  குறும்பட இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அது நிறைவேறாமலே போய்விட்டது. தன்னுடன் படித்தவர்களுக்காக ஸ்கிரிப்ட் பல எழுதிக் கொடுத்திருக்கிறார். அதில் பல குறும்படங்களாக வெளியாகியுள்ளன. ஷாலினி எழுதிய கவிதைத் தொகுப்புகள் ஃபைலாக உள்ளன. அதற்கு புத்தக வடிவம் கொடுக்க அவர் ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள்...?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!