வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (17/07/2018)

கடைசி தொடர்பு:19:19 (17/07/2018)

திரி கிள்ளிய அமித்ஷா பேச்சு... அடுத்தடுத்து பாயும் ஐ.டி அஸ்திரம்!

கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு நடைபெற்ற ஒரே வாரத்தில், தமிழக பொதுப்பணித்துறையின் முக்கிய ஒப்பந்ததாரரான எஸ்.பி.கே குழுமத்தில் அடுத்த ரெய்டை நடத்தி தமிழக ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது வருமான வரித்துறை.

திரி கிள்ளிய அமித்ஷா பேச்சு... அடுத்தடுத்து பாயும் ஐ.டி அஸ்திரம்!

``இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் ஊழல் நடக்கிறது” என்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழகத்தில் வருமான வரித்துறையின் சோதனை இறுக்கமாகிவருகிறது. 'வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை இன்னும் தொடரும்' என்று சொல்கிறார்கள் வருமான வரித்துறைக்கு நெருக்கமானவர்கள். 

வருமானவரித்துறை

தமிழகத்தில் கடந்த வாரம் சமூக நலத்துறையின் முட்டை டெண்டரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக எடுத்துவந்த கிறிஸ்டி நிறுவனம் மற்றும் தமிழக அரசியலில் நிழல் அரசாங்கம் நடத்திவந்த அக்னி ஜெயப்பிரகாஷின் 'அக்னி குழும நிறுவன'ங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். 'கிறிஸ்டி' நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையின்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நாலரை கிலோ தங்கம், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்கமான 'ஸ்வர்ண பூமி' நிறுவனம் குறித்த ஆவணங்களும் அந்த நிறுவனத்தில் தமிழகத்தின் முக்கிய ஆளுமை ஒருவர் முதலீடு செய்திருப்பதையும் வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

இந்த நிலையில், கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு நடைபெற்ற ஒரே வாரத்தில், தமிழக பொதுப்பணித்துறையின் முக்கிய ஒப்பந்ததாரரான எஸ்.பி.கே குழுமத்தில் அடுத்த ரெய்டை நடத்தி தமிழக ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது வருமான வரித்துறை. பொதுப்பணித்துறை தற்போது முதல்வரின் கட்டுபாட்டில் உள்ளது. அதேபோல், எஸ்.பி.கே குழுமத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியும் பங்குதாரராக இருக்கிறார். இந்த ரெய்டின்போது கணக்கில் வராத 160 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டு முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் செக் வைக்கும் விதத்திலேயே நடத்தப்பட்டுள்ளது. 

கிறிஸ்டி நிறுவனம்

'தமிழகத்தில் ஊழல் அதிகம் நடக்கிறது' என்ற அமித் ஷா-வின் கூற்றை உண்மை என்று உணர்த்தும் வகையிலேயே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையினர் வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியினருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத் துறையிடமிருந்து மத்திய அரசுக்கு ரிப்போர்ட் ஒன்றும் சென்றுள்ளது. அதில், தமிழகத்தில் முக்கிய நான்கு அமைச்சர்களின் துறைகளில் ஊழல் பெருகியுள்ளது. 

மேலும், சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்குத் தணிக்கைத் துறையின் ஆய்வறிக்கையில், 'குறிப்பிட்ட சில செலவுத் தொகையை அரசு விரயமாக்கியுள்ளது' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் பின்னணியில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று மத்திய அரசுத் தரப்பில் கருதுகிறது. குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ததில் இரண்டு முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அந்த நிறுவனங்களுடன், தமிழகத்தில் ஆளும் பிரமுகர்களுக்கு உள்ள தொடர்புகளை ஆராய்ந்து வருகிறது மத்திய வருமானவரித்துறை. அதேபோல், உள்ளாட்சித் துறைக்கு அதிக அளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே சென்றுள்ளன. மேலும், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சித் துறைக்கு வந்த நிதியும் முறையாகச் செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் மத்திய அரசுக்கு சென்றுள்ளது. அதையும் 'நோட்' போட்டு அனுப்பியுள்ளார்கள். மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டுவசதி வாரியத் துறையில் சமீபத்தில் 1,000 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களை ஆளும் தரப்புக்கு நெருக்கமான ஒரு நிறுவனம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் பின்புலம் பற்றிய விவரங்களையும் சத்தமில்லாமல் ஆராய்ந்து வருகிறது வருமானவரித்துறை. 

எஸ்.பி.கே.குழுமம்

"கடந்த சில மாதங்களுக்கு முன்பே டெல்லியில் உள்ள ஒரு குழு, தமிழகத்தில் நடைபெற்று வரும் முக்கிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து கண்காணித்து வந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும் நெருக்கமானவர்கள், முக்கிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களையும் இந்தக் குழு தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது. அந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் அமித் ஷாவின் பேச்சு அமைந்திருந்தது. இப்போது எஸ்.பி.கே குழுமத்தில் சோதனை நடத்தி அந்த நிறுவனத்தின் ஊழலை அம்பலப்படுத்தியதுபோல், அடுத்த வாரம் மற்றொரு முக்கிய நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்த நாள்குறித்து விட்டார்கள் வருமானவரித்துறையினர். அதே நேரம் ஆளும் கட்சியால் பலனடைந்த முக்கிய ஒப்பந்ததாரர்கள் அனைவருமே வருமானவரித்துறை தங்களை எந்த நேரமும் நெருங்கலாம் என்ற அச்சத்தில் உஷாராகவே உள்ளார்கள். ஆனால், வருமான வரித்துறையின் உச்சகட்ட இறுக்கம் இனி தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேறப்போகிறது" என்கிறார்கள் வருமான வரித்துறைக்கு நெருக்கமானவர்கள். 


டிரெண்டிங் @ விகடன்