கேரளாவில் தொடரும் மழை - நெல்லை-பாலக்காடு ’பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரத்து! | palaruvi express partially cancelled over heavy rain in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (17/07/2018)

கேரளாவில் தொடரும் மழை - நெல்லை-பாலக்காடு ’பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரத்து!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பாலருவி எக்ஸ்பிரஸ்

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பெய்யும் மழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளைச் சூழ்ந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் 35,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் 12 உயிர்கள் பலியாகியுள்ள சோகம் நடந்துள்ளது.

இந்தநிலையில் எர்ணாகுளம் டவுன் உள்ளிட்ட பல ரயில் நிலையங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் மலைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில்; நெல்லை-பாலக்காடு இடையே இடையே இயங்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொல்லம் முதல் பாலக்காடு வரை இயக்கப்பட்டு வந்த ரயில், பயணிகளின் விருப்பதின் பேரில் கடந்த 9-ம் தேதி முதல் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டது. 13 கண் பாலம், மலைப் பகுதிகள், குகைகள் என எழில் கொஞ்சும் வழியாக இயக்கப்பட்ட இந்த ரயில் பாதையில் கடந்த 11-ம் தேதி மரம் விழுந்தது. ஆனால், டிரைவரின் சாமர்த்தியத்தால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனால் தற்போது மலைப்பகுதியில் ரயிலை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரயில்

இதுதொடர்பாகத் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தொடச்சியாகப் பெய்யும் மழையின் காரணமாகப் புனலூர்-பகவதிபுரம் இடையிலான பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அடிக்கடி மரம் விழுந்துவிடுகிறது. அதனால் நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் (16791/16792) ரயில் இன்று (17.7.2018) முதல் 22-ம் தேதி வரையிலும் நெல்லை மற்றும் கொல்லம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் 22-ம் தேதி வரையிலும் பாலக்காடு - கொல்லம் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.