துாத்துக்குடியில் விரைவில் கடற்படை விமானத்தளம் - கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி., தகவல் | Navy Airbase will be setup ed soon in Tuticorin says Coast Guard Eastern Region IG

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (17/07/2018)

கடைசி தொடர்பு:22:40 (17/07/2018)

துாத்துக்குடியில் விரைவில் கடற்படை விமானத்தளம் - கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி., தகவல்

``தூத்துக்குடி கடற்படைத் தளத்தில் விரைவில் விமானத் தளம் அமைக்கப்படும். இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விபத்துக் காலங்களில் விரைந்து சென்று மீட்க முடியும்” என இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தின் தலைவர் ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடற்படைத் தளம்

துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில், கடலோரக் காவல் படைக்கான  நவீன  வசதிகள் கொண்ட நிர்வாக அலுவலக கட்டடத் திறப்பு  விழா நடந்தது. 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.10.56  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  இக் கட்டடத்தை,  இந்தியக்  கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தலைவர் ராஜன் பர்கோத்ரா திறந்து வைத்தார். 

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் பர்கோத்ரா, `` தூத்துக்குடி கடலோரக் காவல் படை துவங்கி, 30 வருடங்கள் ஆகி விட்டன.  இதன் நிர்வாகப் பணிகளுக்காக, புதிய நிர்வாகக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. நவீன தகவல் தொழில் நுட்பங்கள் அடங்கிய இப் புதிய கட்டடத்தின் மூலம் கடலோரக் காவல் படைக்குப் பயிற்சி அளிப்பது, மீனவர்கள், கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு உதவுவது போன்ற செயல்களை இனி விரைவாக  செய்ய முடியும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியினையும் மேற்கொள்ள முடியும். தூத்துக்குடி கடலோரக் காவல்படை தளத்தில் விரைவில் விமானத்தளம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விபத்துக் காலங்களில் விரைந்து சென்று மீட்க முடியும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. தூத்துக்குடி கடலோரக் காவல்படைக்காக 2019-ல் ஒரு ரோந்துக் கப்பல் மற்றும் 2020-ல் ஒரு ரோந்துக் கப்பல் என இரண்டு புதிய ரோந்துக் கப்பல்கள் வழங்கப்பட உள்ளன” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க