வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (17/07/2018)

கடைசி தொடர்பு:20:27 (17/07/2018)

`17 பேருக்கு எதிராகத் திரண்ட கூட்டம்!’ - உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 17 பேரையும் வெளியில் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்காததால், அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள்

சென்னையில் அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமி, கடந்த ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்டவர்களை, ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்றம்

இதையடுத்து, அவர்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் உரிமையியல் நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலுள்ள நீதிமன்ற அறையிலிருந்து காவல்துறையினர் கிழே அழைத்து வந்தனர். அப்போது மாடிப்படிகளில் ஏறிய 10க்கும் மேற்பட்ட நபர்கள், கைதானவர்களை சரமாரியாகத் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் 17 பேரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வர வழக்கறிஞர்கள் அனுமதிக்காததால் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களை வெளியே அழைத்து வந்தால், தாக்குதல் நடத்துவோம் என்று அங்கு கூடியிருப்பவர்கள் கூறினர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.