வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (17/07/2018)

காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்ல குழுக்கள் அமைத்த தஞ்சை கலெக்டர்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து  திறக்கப்படும் தண்ணீர்  மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைவதை உறுதி செய்திட மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்ட 9 குழுக்களும், வட்ட அளவிலான குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 9 துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை தங்கு தடையின்றி செல்வது உறுதி என கலெக்டர் அண்ணாத்துரை தெரிவித்தார். 

காவிரியிலிருந்து திறக்கப்படவுள்ள தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம்  கடைமடைப் பகுதி முழுவதும் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது, ``தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 19.07.2018 அன்று காவிரி நீர் திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைவதை உறுதி செய்திட மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்ட 9 குழுக்களும், வட்ட அளவிலான குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 9 துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தப் பணிகளை மேற்பார்வையிட பட்டுக்கோட்டை கோட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,  தஞ்சாவூர் கோட்டத்தில் குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர், கும்பகோணம் கோட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி மாவட்டத்தின் கடைமடைப் பகுதி வரை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும். ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரிகள் மற்றும் கால்வாய்களில் கிடக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகளைத் தண்ணீர் செல்லும் வழிதடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாசனக் கால்வாய்களில் நீர் செல்வதற்கு இடையூறாக தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை முன்னுரிமை அடிப்படையில் அகற்றிட வேண்டும். ஆறுகள் மற்றும் கால்வாய் கரையோரங்களில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்படும் பட்டுப் போன மரங்கள் மற்றும் சேதமடைந்த மரங்கள் நீர் செல்வதற்குத் தடையாக இருந்தால் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழு உடனடியாக அகற்றிட வேண்டும். மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.6 கோடி மதிப்பில் 316 கிலோ மீட்டர் அளவுக்கு நடைபெற்று வரும் 72 பராமரிப்புப் பணிகளையும், ஊரக  வளர்ச்சித்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 166 கிலோ மீட்டர் அளவுக்கு நடைபெற்று வரும் கால்வாய்கள் மற்றும் ஏரிகள் பராமரிப்புப் பணிகளையும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.2.9 கோடி மதிப்பில் 199 கிலோ மீட்டர் அளவுக்கு நடைபெறும் 22 பணிகளையும், தமிழ்நாடு நீர் வள நில வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.83 கோடி மதிப்பில் சுமார் 158 கிலோ மீட்டர் அளவுக்கு நடைபெற்று வரும் 17 பணிகளையும் விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்''  என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க