வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (17/07/2018)

கடைசி தொடர்பு:21:53 (17/07/2018)

``கால்வாய்களில் உடனடியாகத் தூர்வார வேண்டும்!" - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாகத் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

``கால்வாய்களில் உடனடியாகத் தூர்வார வேண்டும்!

ழல்கள் பலவிதம். ஆனால், எந்தவொரு ஊழலாக இருந்தாலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டால் ஏதேனும் ஆதாரங்கள் சிக்கக்கூடும். அதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும். குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளைத் தூர்வாரும் பணியில் நடைபெறும் ஊழலோ மிகவும் விநோதமானது. ஆறுகளில் தண்ணீர் வந்துவிட்டால் ஆதாரங்கள் மூழ்கடிக்கப்பட்டு விடும். 'சி.பி.ஐ. வந்தாலும் அத்தகைய ஊழலை நிரூபிக்க முடியாது' என உறுதியாக நம்புகிறார்கள் ஒப்பந்ததாரர்களும், அரசு அதிகாரிகளும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை, தூர்வாரும் பணி என்பது உயிர்நாடி. இதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், எந்த ஆண்டும் தூர்வாரும் பணி நேர்மையாக, முழுமையாக நடைபெற்றதே இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் வறட்சி நிலவியதால் அதுபற்றி யாரும் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு அப்படியல்ல. கர்நாடகாவில் கனமழை கொட்டித்தீர்ப்பதால், அங்கிருந்து காவிரி நீர் தமிழ்நாட்டுக்குப் பாய்ந்தோடி வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தண்ணீர் விவசாயிகளின் வயல்களுக்கு முழுமையாகச் சென்று சேருமா என்பது கேள்விக்குறி அல்ல. நாம் தீர்க்கமாகவே பதில் அளித்துவிடலாம். தற்போதைய சூழ்நிலையில் பார்த்தால், பல விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து ஏமாந்துதான் போக வேண்டியதிருக்கும். ``மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதி திறக்கப்படும்" எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தண்ணீர் - விவசாயிகள்

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாகத் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அபரிமிதமாக மழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், கர்நாடகத்தின் அணைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்க, அந்த அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் மேட்டூர் அணை 100 அடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த ஒரு வாரத்துக்குள் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிகிறது. இந்தத் தண்ணீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் என அடுத்தடுத்து பாய்ந்து விவசாயிகளின் நிலங்களைச் சென்றடைய வேண்டும். ஆனால், தண்ணீர் பாய்ந்தோடும் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ``போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்து, இந்த ஆண்டு நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்" எனக் கவலையோடு தெரிவிக்கிறார்கள் ஜீவக்குமார்விவசாயிகள். 

தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா? 

பாசனக் கால்வாய்கள் தூர்வாருவது குறித்து நம்மிடம் கவலையோடு பேசிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதியும், வழக்கறிஞருமான ஜீவக்குமார், ``வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆறு, திருமலைராஜன் ஆறு போன்ற பிரதான ஆறுகளிலேயே தூர்வாரும் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளின் நிலைமையோ இன்னும் மோசம். 20 சதவிகிதம்கூட தூர்வாரும் பணிகள் முடிவடையவில்லை. இந்த நிலைமையில் ஆறுகளில் தண்ணீர் வந்தால் விவசாயிகளோட வயல்களுக்குத் தண்ணீர் வந்து சேராது. இது மட்டுமல்ல, வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய விபரீதமும் நிகழக்கூடும். காரணம், நீர்நிலைகளின் பெரும்பாலான கரைகள் பலவீனமாக இருக்கு. இதனால், உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது. உடனடியாக தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகளையும், விவசாயிகளையும் சந்திக்க வைத்து, அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். நீர் நிலைகளில் மண்டியுள்ள மணல் திட்டுகள், தாவரங்களுக்கு ஏற்ப, எந்த மாதிரியான இயந்திரங்களைப் பயன்படுத்தி உடனடியாகத் தூர் வாரலாம் என விவசாயிகளிடம் அதிகாரிகள் ஆலோசனை கேட்க வேண்டும். ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி இரவு பகலாக தூர்வாரும் பணிகளைச் செய்து முடித்தால் மட்டுமே, ஓரளவுக்காவது பிரச்னையை சமாளிக்கலாம்” என்றார். 


டிரெண்டிங் @ விகடன்