டெண்டர் விடுவதற்குள் பணி தொடக்கம்! - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைவரை சென்ற அ.தி.மு.க களேபரம் | case filed against ADMK cadre in Kanchipuram

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (17/07/2018)

கடைசி தொடர்பு:21:57 (17/07/2018)

டெண்டர் விடுவதற்குள் பணி தொடக்கம்! - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைவரை சென்ற அ.தி.மு.க களேபரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள படப்பை-ஒரத்தூர் மற்றும் ஒரத்தூர்-நீலமங்கலம் இணைப்புச் சாலையைச் சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.3.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் பணியைத் தொடங்கிய அ.தி.மு.க பிரமுகர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அ.தி.மு.க பிரச்னை

இந்தச் சாலையால் ஒரத்தூர் சிறுவாஞ்சூர், காவனூர் உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பருவமழையின்போது தண்ணீர் செல்வதற்குச் சரியான பாலங்கள் இல்லாததும், சாலைகளைச் சீரமைக்காமல் இருப்பதாலும் இந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்துவந்தது. ஒரத்தூர்-நீலமங்கலம் சாலைகளில் உள்ள பாலங்களைப் புதுப்பிக்க நபார்வு வங்கி மூலம் ரூ.1.26 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாகோடி செலவிடப்பட்டு பாலங்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்தநிலையில், நேற்று படப்பை - ஒரத்தூர் மற்றும் ஒரத்தூர்-நீலமங்கலம் இணைப்புச் சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இந்த நிலையில் அந்தச் சாலைக்கு ஒப்பந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அதற்குள் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாகச் சுந்தர் என்பவர் பொய்யான தகவலைக் கொடுத்து பூமி பூஜை போட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் சுந்தர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அடிக்கல் நாட்டுவது, பூமி பூஜை செய்வது, நிறைவடையாத பணிகளைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

“காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசனுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தருக்கும் இடையே உள்ள உரசல்தான் இதற்குக் காரணம். கடந்த சில தினங்களுக்கு முன் அதே சாலையில் கட்டப்பட்ட பாலங்களை பார்வையிட வருகை தரும் அமைச்சர் ஒருவரை வரவேற்பதற்காகவும் அ.தி.மு.க கொடி ஏற்றி வைக்கவும் சுந்தர் 1,000 பேரைத் திரட்டிக் கொண்டு காத்திருந்தார். ஆனால், மாவட்டச் செயலாளர் கணேசன் அமைச்சரை அழைத்துவரவில்லை என்பதால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டது. இதனால் அந்தச் சாலைப் பணியைத் தன்னிச்சையாகத் தொடங்கியிருக்கிறார் சுந்தர். இந்த அரசியல் பகையே சுந்தர் மீது நடவடிக்கை பாய காரணம்” என்கிறார்கள் கட்சி உள்விவரம் அறிந்தவர்கள்.