வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (17/07/2018)

கடைசி தொடர்பு:22:02 (17/07/2018)

2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை பக்கம் திரும்பி இருக்கிறது. கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கேட்டு தொடர்ந்து தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கர்நாடகாவில் தொடர்ந்து மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பியதால் 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தமிழகத்துக்குத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. தற்போது அணை 100 அடியை எட்டிவிட்டது. இதையடுத்து செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் மதுசூதனன் மற்றும் பல அதிகாரிகள் 16 கண் பாலம் வழியாக கீழே இறங்கி தண்ணீரை தொட்டு வணங்கியதோடு மலர் தூவி தண்ணீரை வரவேற்று, தேங்காய், பழம், பூசணிக்காய் வைத்து  பூஜைகள் செய்து மரியாதை செய்தனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத் துறையின் அதிகாரிகளிடம் பேசியபோது, ``நாங்க ஒவ்வொரு வருடமும் நீரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அணை கட்டப்பட்டதிலிருந்து 64-வது முறையாக தற்போது 100 அடியை எட்டி இருக்கிறது. கடைசியாக 8.8.2014க்குப் பிறகு இப்போது 100 அடியை எட்டியது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் நீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி 11 மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கும் 26-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீராகவும் காவிரி உதவி வருகிறது. தமிழகத்தில் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிப்பது காவிரி ஆறும், மேட்டூர் அணையும் திகழ்ந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியிருப்பது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்'' என்றார்கள்.