வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (17/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (17/07/2018)

ஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின!

 தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரரான எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் செய்யாத்துரை பூர்வீக வீட்டின் சுவர்களை இடித்து சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரரான எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் செய்யாத்துரையின் பூர்வீக வீட்டின் சுவர்களை இடித்து சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.


 கமுதியை அடுத்த கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரைத்தேவர். இவர் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் எஸ்.பி.கே & கோ என்ற பெயரில் நெடுஞ்சாலைதுறையில் அரசு ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறார். செய்யாத்துரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரு நாள்களாக அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. செய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணியைத் தன் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தால் சிறிய ஒப்பந்ததாரர்கள் நெடுஞ்சாலைப் பணியைப் பெறமுடியவில்லை என்றும் குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்தது.

செய்யாத்துரை 
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இவை தவிர செய்யாத்துரையின் சென்னை, மதுரை அலுவலகங்களிலும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும்  2-வது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது. இவை தவிர 'ஆபரேஷன் பார்க்கிங்' என்ற பெயரில் சென்னையில் பல்வேறு வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கோடிக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாகச் சிக்கியது. சுமார் 60 கிலோ தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இவரது சொந்த ஊரான கமுதி அருகே உள்ள கீழமுடி மன்னார் கோட்டையில் உள்ள பூர்வீக வீட்டில் திங்கள்கிழமை இரவு 9.45 மணிக்கு நுழைந்த வருமான வரித்துறையினர் 3 பேர் நள்ளிரவு 12 மணிக்கு சோதனையை முடித்து சில ஆவணங்களை குறிப்பாக, எடுத்துக்கொண்டு வெளியேறினர். பின்னர், இரண்டாவது நாளாக இன்று மதியம் காவல்துறை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறையின் 5 பேர் கொண்ட குழு மீண்டும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின்போது செய்யாத்துரையின் பூர்வீக வீட்டின் அறை ஒன்றில் இருந்த சுவரை இடித்து அதிலிருந்து 3 ஹார்டு டிஸ்குகள், சில ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. சுமார் 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மாலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். முதல்நாள் சோதனையில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என்று கூறி சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், இரண்டாவது நாளாக, கூடுதல் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருவதால் கணக்கில் வராத பணம், சொத்து குறித்த பல ஆவணங்கள் சிக்கியிருக்கலாம் எனக் த்கூறப்படுகிறது. 

இதுவரை சொந்த ஊரிலிருந்து தொழில் தொடங்கிய ஊர் வரை யார் இவர் என தெரியாமல் தொழில் நடத்தி வந்த செய்யாத்துரையின் உண்மை முகம் கடந்த இரு நாள்களாக நடந்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.