வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (18/07/2018)

‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா?’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு!

‘கர்நாடகாவின் தேவைபோக உபரியாக நீர் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற கர்நாடகாவின் நிலைப்பாடு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது’ என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் கலந்துகொண்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள், “28 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டு, தீர்ப்பின் விகிதாச்சார அடிப்படையில் அந்தந்த மாநிலங்களுக்கு உண்டான தண்ணீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், தீர்ப்புப் படி நடப்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மாறாக கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதியே, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரிநீரானது தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

காவிரி

தமிழ்நாடு காவிரியின் கடைமடை உரிமையைப் பெற்ற மாநிலம் என்பதையே கர்நாடகா நினைக்கவில்லை. மாறாக, கர்நாடக நீர்த்தேக்கங்கள் நிரம்பி அணைக்கு பாதிப்பு வரும்பட்சத்தில் தான் உபரிநீரை திறக்கின்றனர். தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா?... இதைப் பார்க்கின்ற பொழுது 28 ஆண்டுகால சட்டப்போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது.

இதற்கு ஒரே தீர்வு, ஒரு மாநிலத்தினுடைய உரிமை நீரை இன்னொரு மாநிலத்தின் நீர்த் தேக்கங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் தேக்கி வைக்கக்கூடாது. பெட்ரோல், டீசல் விலையைப் போல தினந்தோறும் கர்நாடக காவிரியில் வரும் நீரை விகிதாச்சாரப்படி அந்தந்த மாநிலங்களுக்கு பகிர்ந்துகொடுக்க வேண்டும். நடப்புப் பாசனப் பருவத்தில் இதனை நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடந்திருக்கும். கர்நாடகாவின் தேவைபோக உபரியாக நீர் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்ற கர்நாடகாவின் நிலைப்பாடு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் எதிரானது. காவிரித் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் மாதாந்திர அடிப்படையிலான நீர்த்திறப்பால் ஏற்பட்டிருக்கும் நீர் நிர்வாக சிக்கல்களை உணர்ந்து, தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம்பெறச் செய்வதற்காக தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். இதுவே இருமாநில மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்” எனக் கூறினர்.