வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (18/07/2018)

கடைசி தொடர்பு:02:40 (18/07/2018)

முக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது!

முதல்வர், அமைச்சர்களை விமர்சித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக மன்னார்குடியை சேர்ந்த சிவகுமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூவலூரை அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர்தான் சிவக்குமார். இவர் டி.டி.வி தினகரன் அணியில்  உள்ளார். இவர் ஏற்கெனவே ஒருமுறை ஓ.பன்னீர் செல்வம் அணியினரை விமர்சித்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து  அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்  சிவக்குமார், மன்னை சிவா என்ற பெயரில்  பேஸ்புக்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பியதாக கூறி சகிலா சரவணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில்  மீண்டும் சிவக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைதொடர்ந்து சென்னை  சைதாப்பேட்டையில் உள்ள 11து நீதிமன்ற நீதிபதி முன்பு சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமாரை புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.