ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை முறைகேடு வழக்கு விசாரணை தொடக்கம்! | kanchipuram temple case investigation begin

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (18/07/2018)

கடைசி தொடர்பு:05:30 (18/07/2018)

ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை முறைகேடு வழக்கு விசாரணை தொடக்கம்!

ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை முறைகேடு தொடர்பான புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏகாம்பரநாதர்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டைத் திருமாளிகையில் கல்வெட்டுக்கள், கலைநயம்மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன. இரட்டைத் திருமாளிகை சிதிலம் அடையத் தொடங்கியதை அடுத்து, இந்த மாளிகையைச் சீரமைக்க கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு 79.90 லட்சம் ஒதுக்கியது. மேலும் மாளிகையின் கீழ்ப்பகுதியை சீரமைக்க 65 லட்சமும் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள் கூட நிறைவடையாத நிலையில் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சிவபக்தர் டில்லிபாபு என்பவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். டில்லிபாபுவின் புகார் மனுவை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலைத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் புலன் விசாரணையை நடத்தி விரைவில் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டில்லிபாபு குறிப்பிட்ட இந்து அறநிலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மாலை ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்த சிவகாஞ்சி ஆய்வாளர் பழனி, புகார் கொடுத்த அண்ணாமலை, டில்லிபாபு, தினேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வழக்கு.