வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:06:00 (18/07/2018)

8வழிச்சாலையை எதிர்த்து ஆகஸ்ட்-1 ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி - வேல்முருகன் அறிவிப்பு!

எட்டுவழிச்சாலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


 

வேல்முருகன்

 

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள பெரியாண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெகன்(35), பு.முட்லூரைச் சேர்ந்த கட்சித் தொண்டர் மன்சூர்அலி(34) ஆகிய இருவரும் அடுத்தடுத்து தீக்குளித்து உயிரிழந்தனர்.  இந்நிலையில் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று சிதம்பரம் அருகே உள்ள பெரியாண்டிக்குழி கிராமத்திற்கு வந்தார். பின்னர் அங்கு ஜெகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அவரது மனைவியிடம் குடும்ப நல நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார்.

இதையடுத்து பு.முட்லூரில் உள்ள மன்சூர்அலியின் இல்லத்திற்கு சென்ற வேல்முருகன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரது தாயாரிடம் குடும்ப நல நிதியாக 5 லட்சம் ரூபாயினை வழங்கினார். இதையடுத்து வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `மோடி அரசும் தமிழக அடிமை எடப்பாடி அரசும் கூட்டணி சேர்ந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டதைக் கண்டித்து, நடத்திய போராட்டத்தினால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அதைக் கண்டித்து உயிரிழந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 2 கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினேன்.

சென்னை சேலம் 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிற்கு எதிராக இந்திய அளவில் பெரிய நிகழ்வை நடத்த உள்ளேன். எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து வருகிற 1ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி என்று சொல்லப்படுவர்களின் வீடுகளில் தங்கள், பல கோடி பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பணமா? ஊழல் பணமா என்பதை சிபிஐ மூலம் விசாரணை நடத்தி கண்டு பிடிக்க வேண்டும். தற்போது நடந்து வரும் ஆட்சி 40 சதவீத கமிஷன் ஆட்சி. 8 வழிச்சாலை திட்டத்தில் கமிஷன் பெறுவதற்கே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்று அவர் கூறினார்