‘காவிரி தீர்ப்புக்கு மாறாக பவானிசாகர் நீர் திறப்பு’ - கொந்தளிக்கும் கீழ்பவானி விவசாயிகள்!

சமீபத்தில், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர், காவிரித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மாறாக அதிகமாகத் திறக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசே நீதிமன்ற அவமதிப்பைச் செய்யும் வகையில் செயல்பட்டுவருகிறது என கீழ்பவானி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவிரி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கடந்த ஜூலை 12-ம் தேதி தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாயில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்களுக்காக 7.05 டி.எம்.சி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 3.45 டி.எம்.சி தண்ணீரும் என மொத்தம் 10.5 டி.எம்.சி தண்ணீரை  பாசனத்துக்காக 80 நாள்களுக்குத் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, கொடிவேரியில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி தண்ணீரைத் திறந்துவிட்டனர்.

காவிரி

காவிரித் தீர்ப்பின்படி பழைய பவானி பாசனங்களான கொடிவேரிக்கும் (தடப்பள்ளி - அரக்கன்கோட்டை), காலிங்கராயனுக்கும் ஆண்டுக்கு 8.13 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்புக்கு மாறாக, கடந்த ஜூலை 12-ம் தேதி, 10.5 டி.எம்.சி தண்ணீர் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதாவது, காவிரித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட 2 டி.எம்.சி கூடுதலான தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இந்த அரசாணையைப் பார்த்து, ‘தமிழக அரசே இப்படி காவிரித் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளலாமா? இது, நீதிமன்ற அவமதிப்பு என கீழ்பவானி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கீழ்பவானி பாசனத்தில் உள்ள நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கின்றன. அப்படியிருக்க, கீழ்பவானி பாசன நிலங்களுக்கு முன்னுரிமைகொடுத்து தண்ணீர் திறக்காமல், மற்ற பாசனங்களுக்கு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, கீழ்பவானி பாசன விவசாயிகளைக் கொதிப்படைய வைத்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!